பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கடன் கொடுக்க ஐ.எம்.எப் அமைப்பால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் அங்கு மின்சாரம், பெட்ரோல், டீசல் விலை போன்ற அடிப்படை வசதிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு வரிகள், கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. எனினும் அது போதுமான அளவு கிடைப்பதில்லை. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.. ஒரு லிட்டர் பால் விலை ரூ. 250க்கும் கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ. 800க்கும் விற்கப்படுகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் கடும் வேதனையடைந்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபரான சனா அம்ஜத் என்பவர், ஒரு இளைஞரிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அரசு குறித்து சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அந்த இளைஞர், ஷெபாஷ் ஷெரீப், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்கள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேலும் பாரதப் பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆள வேண்டும்’ என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால் மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறினார். மேலும், பாகிஸ்தானில் பிறக்கக்கூடாது என்று விரும்புகிறேன். பாகிஸ்தான் பாரதத்தில் இருந்து பிரிக்கப்படாமல் இருந்திருக்க நான் விரும்புகிறேன். அப்போதுதான் தக்காளியை கிலோ ரூ. 20க்கும், கோழிக்கறியை கிலோ ரூ.150க்கும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50க்கும் வாங்கலாம். எங்களுக்கு ஒரு இஸ்லாமிய தேசம் கிடைத்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இங்கு இவர்களால் இஸ்லாத்தையும் நிறுவ முடியவில்லை. பாரதப் பிரதமர் மோடி, நம்மை விட சிறந்தவர். அங்குள்ள மக்கள் மோடியை மதிக்கின்றனர். அவரை பின்தொடர்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் நான் வாழ தயார். அவர் ஒரு சிறந்த மனிதர். அங்குள்ள மக்களுக்கு தக்காளி, சிக்கன் போன்றவை நியாயமான விலையில் கிடைக்கின்றன. மோடியை நமக்கு (பாகிஸ்தானியர்களுக்கு) கொடுத்து நம் நாட்டை ஆள வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என கண்ணீர் மல்க பேசியுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், பாரதம் பாகிஸ்தான் மட்டுமில்லாமல் இந்த வீடியோ தற்போது உலகெங்கிலும் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது.