மாயமாகி 10 வருடங்கள் கடந்து கண்டுபிடித்த பெற்றோர்; உதவியது ஆதார் அட்டை.

0
202

ஆதார் அமலுக்கு வந்த நேரத்தில் அதன் மீதான பல சர்சையான கருத்துகளை கக்கி எதிர் கட்சிகள் வன்மங்களை வெளிபடுத்தினர். அதனுடைய தொடர் சந்தேகங்கள் தற்போதும் உள்ளன. அது இன்னும் ஓயவில்லை என்றே சொல்லலாம். ஆனால், மாயமான மனநலம் பாதித்த வாலிபர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தில் சேர ஆதார் பதிவு உதவி உள்ளது.


மராட்டிய மாநிலம் நாக்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போலீசார் 8 வயது சிறுவன் ஒருவனை மீட்டனர். மனநலம் பாதித்த அந்த சிறுவனால் பேச முடியவில்லை. இதனால் போலீசாரால் அவனது பெற்றோர் மற்றும் சொந்த ஊரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே போலீசார் அவனை நாக்பூர் பஞ்சசீல் நகரில் ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்தி வந்த சமர்த் தாம்லேவிடம் ஒப்படைத்தனர். அந்த சிறுவன் அப்போது, ‘அம்மா, அம்மா’ என்ற வார்த்தையை மட்டுமே கூறியுள்ளான். எனவே சமர்த் தாம்லே அந்த சிறுவனுக்கு அமன் என பெயர் வைத்தார். இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு அவரது ஆசிரமம் மூடப்பட்டது. எனவே அமனை கவனிக்க யாரும் இல்லை. இதையடுத்து சமர்த் தாம்லே அமனை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பத்தில் ஒருவனாக வளர்த்து வந்தார். இதற்கிடையே அருகில் உள்ள பள்ளியில் 10-ம் படித்து வந்தான். இதில் பள்ளி நிர்வாகம் அமனின் ஆதார் அட்டையை கேட்டு உள்ளது. இதையடுத்து சமர்த் தாம்லே, அமனை ஆதார் கார்டுக்கு பதிவு செய்ய அழைத்து சென்றார். ஆனால் பயோ மெட்ரிக் பதிவில் ஏற்பட்ட பிரச்சினையால் அவரது பதிவு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூன் 3-ந் தேதி சமர்த் தாம்லே, வாலிபரை நாக்பூர் மான்காபூரில் உள்ள ஆதார் மையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு உள்ள ஊழியர் அமனின் ஆதார் கார்டுக்கு பதிவு செய்ய பல முறை முயற்சி செய்தனர். ஒவ்வொரு முறையும் பயோ மெட்ரிக் பிரச்சினையால் ஆதார் பதிவு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து ஆதார் மைய மேலாளர் அனில் மாரதே இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் உள்ள யு.ஐ.டி.ஏ.ஐ. தொழில்நுட்ப மையம் மற்றும் மும்பை மண்டல அலுவலகத்தில் உதவி கேட்டார். அப்போது தான் கடந்த 2011-ம் ஆண்டே அமனுக்கு ஆதார் கார்டு பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாயமாவதற்கு முன்னர் அவனது குடும்பத்தினர் ஆதார் பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது உண்மையான பெயர் முகமது ஆமீர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அமனின் உருவமும் அவரது ஆதார் கார்டில் இருந்த போட்டோவும் ஒத்துப்போனது.
இதையடுத்து அமனின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் ஓட்டல் நடத்தி வருவதும் தெரியவந்தது. அவர்களிடம் அமன் ஒப்படைக்கப்பட்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here