தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி, முகமது ஷாரிக் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதி ஆட்டோவில் எடுத்துச் சென்ற குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குண்டு வெடிப்பில் பலத்த தீக்காயம் அடைந்த ஷாரிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். தற்போது அவனது தீக்காயங்கள் குணமான நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து பயங்கரவாதி ஷாரிக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்தனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள், விசாரணைக்காக அவனை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு மற்றும் கோவை கார் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.