வளர்ச்சியின் சக்கரங்கள் இயக்கமாக மாறும்போது…

0
49

குஜராத் அரசு வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “குஜராத்தில் 2ம் முறையாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அளித்து நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களுடைய திறனை பயன்படுத்திக்கொள்ள அரசு உறுதிப்பூண்டுள்ளது. பெருமளவில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காக மத்திய அரசு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இங்கு வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அமிர்தகால உறுதிமொழிகளின் முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றும் வகையில், இளைஞர்கள் பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வேலைவாய்ப்பு பரிமாற்றம் மூலம் கடந்த ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 18 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். மின்னணு தளங்கள், அலைபேசி செயலிகள், இணையதளங்கள் ஆகிய தொழில்நுட்ப உதவியுடன் பணியாளர் சேர்ப்பு நடவடிக்கைகள் முழுவதும் வெளிப்படைத்தன்மை கொண்டவையாக உள்ளன.

அரசின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், உற்பத்தியை ஊக்குவித்தல், சுய வேலைவாய்ப்புக்கான சரியான சூழலை உருவாக்குதல் மூலம் ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உத்தரவாதம் மிக்க நிதியுதவி மற்றும் மாறிவரும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப இளைஞர்களின் திறன் வளர்ச்சி ஆகியவற்றை அரசு கவனம் செலுத்துகிறது. வளர்ச்சியின் சக்கரங்கள் இயக்கமாக மாறும்போது ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் உருவாகும். நாட்டின் உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இதரத் துறைகளின் வளர்ச்சிக்காக மில்லியன் கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் பாரதம் மிகப்பெரிய உற்பத்தி கேந்திரமாகத் திகழும் என்றும் உலக நாடுகளின் நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த புரட்சிக்கு இளைஞர்கள் தலைமை தாங்குவார்கள். குஜராத் மாநிலம் தகோதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ரயில் எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலைக் கட்டப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் செமி கண்டக்டர்களின் மிகப்பெரிய கேந்திரமாகவும் குஜராத் அமையும்.

கொள்கை நிலையிலான முக்கிய மாற்றங்கள், புத்தொழில்கள் ஊக்கம் பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. நாட்டில் தற்போது 90,000த்திற்கும் அதிகமான புத்தொழில்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான இளைஞர்களை இவை சுயவேலைவாய்ப்புக்கு ஊக்கப்படுத்துகின்றன. முத்ரா திட்டத்தில் வங்கி உத்தரவாதம் இல்லாமல் அரசு நிதியுதவி வழங்குகிறது. சுயஉதவிக் குழுக்களில் இணைவதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் தங்களின் சொந்தக்கால்களில் உறுதியுடன் நிற்கிறார்கள். இவர்களுக்கு பலநூறு கோடி ரூபாய் நிதியுதவியை அரசு வழங்குகிறது. உலகில் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான ஆற்றலை பாரதம் பெற்றுள்ளது. திறன் மேம்பாட்டில் இருந்து சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஏழை, எளிய, பட்டியல் சமூக, பழங்குடி சமூகத்தினர் மற்றும் பெண்களுக்கு சமமான வாய்ப்பை இது வழங்கும்.

பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30 ‘திறன் இந்தியா’ சர்வதேச மையங்கள் உருவாக்கப்படும். இவற்றில் புதுயுக தொழில்நுட்பத்தின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ‘விஸ்வகர்மா’ திட்டம் மூலம் கைவினைக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து சிறிய அளவிலான வணிகத்திற்கு உலக சந்தை கிடைப்பதற்கு உதவி செய்யப்படும். அரசுப்பணி மட்டுமே இளைஞர்களின் இலக்காக இருந்தால் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி தடைபட்டுவிடும். அவர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவர்களை இங்கே அழைத்து வந்துள்ளது. இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை முழுவதும் முன்னேறி செல்வதற்கு உதவுகின்ற புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய பணி எதுவாக இருப்பினும் உங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ள சிறப்புக் கவனம் செலுத்துங்கள். அரசு ஊழியர் ஒவ்வொருவரும் சிறந்த பயிற்சியை பெற வேண்டும் என்பதே எங்களின் முயற்சி” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here