பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவது, ஹிந்து சிறுமியரை கடத்தி திருமணம் செய்யும் சம்பவங்களை கண்டித்து மார்ச் 30 அன்று ஹிந்து அமைப்புகள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையராக உள்ள ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும் அவர்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருவதாகவும் அங்குள்ள இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் ஹிந்து சிறுமியரை கடத்தி முஸ்லிம்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த சம்பவங்களை கண்டித்து சிந்து சட்டசபை கட்டிடத்தில் மாபெரும் பேரணி நடத்த சிறுபான்மையர் நலனுக்காக போராடும் ‘பாகிஸ்தான் தாராவர் இட்டேஹாட்’ என்ற அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தப் பேரணிக்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து தாராவர் இட்டேஹாட் தலைவர் பகர் ஷிவா குச்சி கூறுகையில் மார்ச் 30 ல் நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்ப்பார்கள். இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த பேரணி நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.