பாரதீய கிசான் சங்கத்தின் மாநில செயலாளர் வீரசேகரன் தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து தெரிவிக்கையில், “முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது துறை அமைச்சர் இந்த அறிக்கை தவழும் குழந்தையாக உள்ளது, வரும் ஆண்டுகளில் எழுந்தோடும் குழந்தையாக இருக்கும் என அறிவித்திருந்தார் ஆனால் எழுந்து ஓடும் விவசாயிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த பட்ஜெட் இல்லை என்பது தான் விவசாயிகளுடைய கருத்தாக உள்ளது, கடந்த ஆண்டுகளை விட 2 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தி சுமார் 63 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நடந்து உள்ளது. அதுபோல உணவு தானிய உற்பத்தியானது 120 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 12 லட்சம் டன் அதிகம். அதோடு மட்டுமல்லாமல் 50 ஆண்டு கால சாதனையாக சுமார் ஐந்து லட்சம் ஏக்கரில் டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி நடைபெற்று உள்ளது. இவ்வளவு சாதனைகள் புரிந்த விவசாயிகளுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கை சுமார் 16,000 கோடியில் மட்டுமே அளித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த வேளாண் பட்ஜெட்டில் பாராட்டப்படக்கூடிய அம்சங்கள் என்னவென்றால் ஐ.நாவின் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறு தானிய உற்பத்தியை பெருக்க அவைகளில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்’ என்ற இயக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை வரவேற்கிறோம். மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண் குழுக்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி மற்றும் பரிசு, மாற்றுப் பயிர், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், குறித்த திட்டங்களை வரவேற்கிறோம். அது போல, அங்கக வேளாண்மைக்காக இலக்கு ஏற்படுத்தப்பட்டு சுமார் 15,000 ஏக்கரில் அங்கக வேளாண்மை முன்னெடுத்துச் செல்லப்படுவதோடு மட்டுமல்லாமல், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக அங்கக வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்ய அதை விற்பனை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதை பாராட்டுகிறோம். தொடர்ந்து தமிழக அரசு, நீலகிரி மாவட்டத்தை முழுவதுமான இயற்கை விவசாய மாவட்டமாக மாற்றுவதற்கு முன்னெடுத்து வரும் பணிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேபோல், தக்காளி வெங்காயம் சாகுபடிகளை ஆண்டு முழுவதும் கிடைக்க சந்தையில் சீரான விலை நிர்ணயம் இருக்க தக்காளிக்கு 19 கோடியும் வெங்காயத்திற்கு 40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை ஆராய்ச்சிக்காக ஒரு ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும் என்கின்ற அறிவிப்பு வரவேற்க கூடியது தான். ஆனாலும், தற்போதுள்ள வேளாண் பல்கலைக் கழகம், வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் தோட்டக்கலை பல்கலைக் கழகம் என பிரிக்கப்படும், அவைகள் திருச்சி அல்லது மதுரையில் ஆரம்பிக்கப்படும் என்கின்ற அரசின் அறிவிப்பு இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. குருவை சாகுபடி தொகுப்பானது டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழக முழுவதும் வர வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. நதிகள் இணைப்பு, குறிப்பாக காவிரி குண்டாறு வைகை இணைப்பு கிருஷ்ணா கோதாவரி காவிரி இணைப்பு குறித்து எந்த ஒரு பெரிய அறிவிப்புகளும் இல்லை. பயிர் காப்பீட்டில் தனி நபர் பாதிக்கப்பட்டாலும் பயனடையும் வகையில் இருக்கும் என்கின்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதோடு மட்டுமல்லாமல் அனைத்து வேளாண் உற்பத்தி பொருள்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரள அரசு போல, தமிழகத்திலும் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு, அறிவிப்பாக மட்டுமே உள்ளது. தொடர்ந்து நெல்லுக்கு, கரும்புக்கு, பால் உரிய நியாயமான விலை உயர்வு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது விவசாயிகளுக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுகிறது. இந்த அறிவிப்புகள் எல்லாம் வேளாண் மானிய கோரிக்கை விவாதத்தின் போது இணைக்கப்பட்டு விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என நம்புவோம்” என கூறியுள்ளார்.