யுகாதி

0
268

தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகள் பேசும் மக்களின் வருடப்பிறப்பு யுகாதி திருநாள். இளவேனிற் காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் உகாதி மஹாராஷ்ட்ரா, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மக்கள் குடிபாட்வா எனவும், சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் தத்தம் கலாச்சார முறைப்படி கொண்டாடுகின்றனர். ஹிந்து சூரிய சந்திர நாட்காட்டியின்படி, யுகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது. சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே புது முயற்சிகளை மேற்கொள்ள மிகச் சிறந்த தினம். மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், அலாதி முக்கியத்துவம் பெறுகிறது யுகாதி. (“யுகா” என்ற வடமொழி சொல்லின் பொருள் புதிய யுகத்தின் ஆரம்பம்.)

காலையில் எழுந்து எண்ணெய் குளியல் மேற்கொண்டு, புத்தாடை அணிந்து, வாசலில் மாவிலைத் தோரணம் மற்றும் வயல்களில் விளைந்த தானியங்களை கட்டி, வண்ண ரங்கோலி இட்டு, இந்த நாளைத் தொடங்குகிறார்கள். இஷ்ட தெய்வ மற்றும் குல தெய்வ வழிபாடு இன்று பிரதானம். ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்பது தொடர்ந்து போற்றிச் செய்து வரும் கலாச்சாரம்.

வீட்டில் பெரியவர்களிடம் ஆசி பெறுவது, சிறப்பு இனிப்பு பலகாரம் போன்றவற்றை தயாரித்து அக்கம்பக்கத்தினருக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது, இந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பது, மாலையில், பொது இடத்தில் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவது, புதிய முயற்சிகளுக்கு வித்திட்டு மங்களகரமானது தொடங்குவது, அனைத்தும் இன்றைய சிறப்பு. உகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும்.

இன்று வெல்லம், புளி, மிளகு சேர்த்து பாணாக்கம் என்னும் பானத்தை விருந்தினர்களுக்கு அளிப்பர். இன்றைய விருந்தில் இடம் பெறும் முக்கிய உணவு யுகாதி பச்சடி. மாங்காய், வெல்லம், மிளகாய், புளி, வேப்பம்பூ, உப்பு, என அறுசுவையும் கலந்து செய்யப்படும் உணவு வகை இது. வாழ்க்கையானது இன்பம், துன்பம் நிறைந்தது என்பதை உணர்த்தவே, இதுபோன்ற உணவுகளை வருடத்தின் முதல்நாள் செய்யப்படுகிறது. கன்னட மொழியில் யுகாதி பச்சடியை பேவு பெல்லா என அழைப்பர்.

சடங்குகளும், சம்பிரதாயங்களும் குறைந்து வரும் இக்காலத்தில், பூகோள, கலாச்சார ரீதி மற்றும் ஆன்மிகப் பின்னணி கொண்டு மக்களை மெய்ஞ்ஞான உணர்வினைத் தட்டி எழுப்பவல்ல இவை போன்ற யுகாதி போன்ற பண்டிகைகள் மக்களிடையே பகை மறந்து மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொணர்ந்து, சுபிட்ஷம் பெருகட்டும் என பிரார்த்திப்போம்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here