- பாரதத்தின் முன் முயற்சிகளை அடுத்து, இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. எனவே, பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தானிய பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, நமது நாட்டு ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய மாவை அறிமுகம் செய்ய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கம்பு, சோளம், கேழ்வரகு ஆகிய 3 சிறுதானியங்கள், வீரர்களின் முன்னுரிமைக்கு ஏற்ப அளிக்கப்படும். ராணுவ வீரர்கள் இவற்றில் எதை விரும்புகிறார்களோ, அந்த சிறுதானியம் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படும். அடுத்த நிதியாண்டில் இருந்து ராணுவ வீரர்களின் அரிசி, கோதுமை மாவு ஒதுக்கீட்டில் 25 சதவீதத்துக்கு மிகாமல் சிறுதானியங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் புரதச்சத்து, நுண் ஊட்டச்சத்துகள் அதிகம் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது புவியியல் சூழலுக்கும் சீதோஷ்ண நிலைக்கும் சிறுதானியங்கள் பொருத்தமானது. இவை, வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், நமது ராணுவ வீரர்களின் மனஉறுதியை அதிகரிக்கும். அனைத்து மட்டத்தை சேர்ந்த ராணுவத்தினருக்கும் அன்றாட உணவில் சிறுதானியங்கள் இடம்பெறும். ராணுவ நிகழ்ச்சிகள், ராணுவ உணவகங்கள் ஆகியவற்றில் சிறுதானியங்களை பரவலாக பயன்படுத்துமாறு அறிவுறை வழங்கப்பட்டு உள்ளது. சுவையான சிறுதானிய உணவுகள் சமைக்க சமையல் கலைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வடக்கு எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்களை வழங்க சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ கேன்டீன்களிலும் சிறுதானியங்கள் அறிமுகப்படுத்தப்படும்” என கூறப்பட்டுள்ளது. நமது ராணுவ வீரர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, அன்றாட உணவில் சிறுதானிய உணவு சேர்க்கப்பட்டு வந்தது. பின்னர், கோதுமை மாவுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் சிறுதானியங்கள் நிறுத்தப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.