மடத்தை இடித்தது நியாயமா?

0
181

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே 23,800 சதுரடியில் இருந்த அம்மணி அம்மன் மடத்தில், வழக்கறிஞர் சங்கர், வீடு கட்டி குடியிருந்தார். இந்த இடம் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தம் என கூறி, அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாடி வீடு கடந்த 18ம் தேதி இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அதேசமயத்தில், பாழடைந்த கட்டிடம் என கூறி, அம்மணி அம்மன் மடத்தை, அராஜகமாக பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்தது ஹிந்து சமய அறநிலையத்துறை. இதற்கு இந்து முன்னணி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அம்மணி அம்மன் மடத்தை இடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. மடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றப்பட்டது வரவேற்கப்படும் நிலையில், மிகப் பழமையான, புனிதமான அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதற்கு ஹிந்து அமைப்பினர், பக்தர்கள், ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இடிக்கப்பட்டுள்ள அம்மணி அம்மன் மடத்தை, அவரது வம்சாவளியினர் நேற்று பார்வையிட்டனர். இதில், செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் (அம்மணி அம்மனின் சொந்த கிராமம்) வசிக்கும் நடராஜன் மனைவியான 75 வயது மூதாட்டி அம்மணி அம்மன் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

அம்மணி அம்மன் இதுகுறித்து பேசுகையில், “அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரத்தை கட்டி எழுப்பிய அம்மணி அம்மனின் வழி பேரன், பேத்திகள் நாங்கள். அம்மணி அம்மன் இடத்தில் இருந்த வீடு அகற்றப்பட்டது சரிதான். ஆனால், மடத்தில் இடித்தது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. அம்மணி அம்மன் பல இடங்களில் யாசகம் எடுத்து, கஷ்டப்பட்டு கோபுரத்தையும், மடத்தையும் கட்டினார். அப்போது அவர் பல கேலி மற்றும் அவமானங்களை சந்தித்தார். அவர் கட்டிய மடத்தை, மக்களுக்காக அன்னசத்திரமாக மாற்றி சமூக சேவை செய்துவந்தார். இத்தகைய சிறப்புமிக்க மடத்தை இடித்தது மிகவும் தவறானது. இடித்தவர்கள்தான் அதனை மீண்டும் கட்டிக் கொடுக்க வேண்டும். கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாள் உற்சவத்துக்கு வரும் பக்தர்கள், இங்கு தங்கவைக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மணி அம்மன் நினைவாக, அவரது பெயரில் உள்ள மடம், தொடர்ந்து செயல்பட வேண்டும். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது போன்று, பழைய அன்னசத்திரமாகவே அது தொடர வேண்டும். அம்மணி அம்மனின் புகழ் நீடித்து இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார். அம்மணி அம்மன் மண்டபம் இடிப்பு குறித்து அகமுடையார் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், “அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை இடித்து அகற்றியதற்கு வாழ்த்துகள். ஆனால், அம்மணி அம்மன் மடத்தை ஹிந்து சமய அறநிலையத் துறை அகற்றியதை கண்டிக்கிறோம். ஹிந்து சமய அறநிலையத் துறை தொடங்கப்படுவதற்கு முன்பாக உருவான தொன்மையான மடம் இது. வணிக ரீதியாக பயன்படுத்தாமல், பக்தர்களின் தியான கூடமாக இதனை அமைக்க வேண்டும். பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகள் மருது சகோதரர்களின் திருவுருவ சிலையை மடத்தில் வைக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here