சர்வதேச புவி அரசியல் நிலவரம், நம்பகத்தன்மை, குறைந்த செலவு போன்றவற்றால், விண்வெளி சந்தையில் உலக நாடுகளின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா முன்னேறி வருகிறது.
தொலை தொடர்பு சேவைகள் உள்ளிட்டவற்றுக்காக பல நாடுகள், செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. செயற்கைக் கோள்களை அனுப்பும் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதுவரை, ரஷ்யா, சீனா, அமெரிக்காவையே, மற்ற உலக நாடுகள் தங்களுடைய செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காக சார்ந்திருந்தன. இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதையடுத்து ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், ரஷ்யாவின் உதவியைப் பெறுவதற்கு இந்த நாடுகள் தயாராக இல்லை. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கடும் மோதல் உள்ளது. உலகின் வலுவான நாடாக தன்னை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. உலக நாடுகளை, சீனா உளவு பார்ப்பதாகவும் புகார் உள்ளது. இதனால், சீனாவையும் உலக நாடுகள் புறந்தள்ளியுள்ளன.இந்நிலையில், அமெரிக்காவின் பெரும் பணக்கார தொழிலதிபர் எலான் மஸ்க்கின், ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனமே தற்போது விண்வெளி வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கிறது. ஒரு கணிப்பின்படி, 2020ல் 36 லட்சம் கோடி ரூபாயாக இருந்த விண்வெளி வர்த்த்கம், 2025ல் 49 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் ராக்கெட் வாயிலாக சமீபத்தில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன. இதற்கு முன், கடந்த ஆண்டு அக்டோபரில் 36 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. அதிவிரைவு இன்டர்நெட் சேவைக்கான தேவை உலகெங்கும் உள்ளதால், செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவது பெரிய வர்த்தகமாக மாறியுள்ளது. இஸ்ரோவின், நியூஸ்பேஸ் இந்திய நிறுவனம், வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கான ஒப்பந்தங்களை பெற்று வருகிறது. பிரான்சின் ஏரியன்ஸ்பேஸ் நிறுவனம், புதிய ராக்கெட் தயாரிப்பது தாமதமாகியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் நிறுவனம் சமீபத்தில் செலுத்திய ராக்கெட் தோல்வியில் முடிந்தது. இதனால் தற்போதைய நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையே உலக நாடுகள் அதிகம் எதிர்பார்க்கின்றன. இந்த சூழ்நிலையில், ”சர்வதேச புவி அரசியல் நிலவரம், மிகக் குறைந்த செலவு, நம்பகத்தன்மை ஆகியவை, இஸ்ரோவுக்கு சாதகமாக அமைந்து உள்ளன. ”இதனால், செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியில் அனுப்புவதற்கான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு அதிகம் கிடைத்து வருகின்றன,” என, நியூஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.