இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக்கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அருணாசல பிரதேச எல்லை விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து சர்ச்சையாக நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தின் சர்வதேச எல்லைப்பகுதிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சென்றார். அங்கு சீன எல்லையை ஒட்டியுள்ள கிபிதூ கிராமத்துக்கு சென்ற அவர், அங்கு ‘துடிப்பான கிராமங்கள் திட்டத்தை’ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.அமித்ஷாவின் இந்த அருணாசல பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ‘சாங்னன் (அருணாசல பிரதேசத்தின் சீன பெயர்), சீனாவின் பிராந்தியம். இந்த பகுதியில் இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகள், சீனாவின் இறையாண்மையை மீறுவதாகும். இது எல்லைப் பகுதிகளில் அமைதிக்கு உகந்தது அல்ல. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்’ என்று தெரிவித்தார்.