சத்ரபதி சிவாஜியின் ராணுவமும் பாலியல் கொடுமை செய்துள்ளதாக, காங்கிரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நேஷனல் ஹெரால்டு’ ஆசிரியர் சுஜாதா ஆனந்தன் கூறியிருப்பது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நேஷனல் ஹெரால்டு’ ஆசிரியர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான- என்.சி.இ.ஆர்.டி., தயாரித்துள்ள வரலாறு பாடப் புத்தகங்களில், முகலாய மன்னர்களை பெருமையாக பேசும் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வரலாற்றில் இருந்து முகலாய மன்னர்களை அகற்ற, பா.ஜ., அரசு முயற்சிப்பதாக, இடதுசாரி சிந்தனை கொண்ட வரலாற்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு ஆசிரியர் சுஜாதா ஆனந்தன், ‘முகலாயர்கள் இல்லையென்றால், சிவாஜியும் இல்லை. அவரை யாருக்கும் தெரிந்திருக்காது. முகலாய மன்னர்களை எதிர்த்ததால் தான் வரலாற்றில் சிவாஜி இடம்பிடித்தார். ‘முகலாய ஆட்சி நடந்த காலகட்டங்களில் போரில் வென்ற படையினர், எதிரிகளின் சொத்துகளை கொள்ளையடித்தனர்; பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டனர்.
சிவாஜியின் ராணுவமும் அதைத் தான் செய்தது’ என, சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார். சாவர்க்கரை அவமதித்த காங்கிரஸ், இப்போது முகலாய ஆட்சிக்கு முடிவுரை எழுதி, ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜியை அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் கடவுளுக்கு நிகராக சிவாஜி போற்றப்படும் நிலையில், இந்த புதிய சர்ச்சை, அம்மாநிலத்தில் காங்., கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.