காங்கேயம் மேலப்பாளையத்தில் ஏப்ரல் 17, 1756 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும், தானியமும் வசூலித்து கொண்டு போன பொழுது, அதை பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என கம்பீரமாக சொல்லி அனுப்பினார். கொங்குப் பகுதியில் இவரின் ஆட்சி ஆங்கிலேய அரசுக்கு உறுத்தலாக இருந்தது. ஆங்கிலேய எதிர்ப்பு படையில் திப்புவோடு இவர் கைகோர்த்து நின்றது இன்னமும் உறுத்தியது. 1799ம் ஆண்டு நடைபெற்ற மைசூர் யுத்தத்தில் திப்பு மரணம் அடைந்து மைசூர் ஆங்கிலேயர் வசம் போனது. வேலப்பன் எனும் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய ஆள் ஆங்கிலேயரிடம் பிடிபட்டான். அவர்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து தகவல்களை சின்னமலைக்கு அனுப்பி கொண்டிருந்தான். தீர்த்தகிரியை கைது செய்து வரும்படி மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை ஆங்கிலேய அரசு அனுப்பியது. வேலப்பன் மூலமாக தகவல் அறிந்து நொய்யல் ஆற்றில் வெள்ளையர் படையை சிதறடித்து மக்கீஸ்கானின் தலையை துண்டித்து வீரம் காட்டினார் சின்னமலை. ஆங்கிலேயர்கள் மீண்டும் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் குதிரைப் படைகளை அனுப்பினர். இப்படை ஓடாநிலையில் சின்னமலை அவர்களின் படையுடன் மோதியது. மீண்டும் ஆங்கிலேய அரசு தோல்வி கண்டது. மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை. இவரின் கோட்டையை தகர்க்க பீரங்கி படையோடு ஆங்கிலேய அரசு வருவதை வேலப்பன் மூலம் அறிந்து கோட்டையை விட்டு வெளியேறினார் அவர். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகில் உள்ள ஓடாநிலையில் அவர் கட்டிய கோட்டை, 143 பீரங்கிகளை வைத்து, பிரிட்டிஷ் படைகள் இடிக்க வேண்டிய அளவுக்குப் பலமானதாக அது இருந்தது. கருமலைப் பகுதி வனத்தில் சின்னமலை தலைமறைவாக இருப்பது அவரது சமையல்காரர் நல்லப்பனுக்கு மட்டும்தான் தெரியும். நல்லப்பன் விலை போனான். சின்னமலை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சுரங்கத்துக்குள் இருந்து பிரிட்டிஷ் படை வீரர்கள் வந்து, சின்னமலையைப் பிடித்துவிடுகிறார்கள். சங்ககிரிக் கோட்டையில் வைத்து தூக்கிலிடப்படுகிறார். பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டே சின்னமலைக்குத் தகவல் அனுப்பும் காரியத்தை தொடர்ந்து செய்த வீரன் வேலப்பனை அடையாளம் கண்டு விசாரிக்க , ”என் நாட்டுக்காக இப்படி ஒரு செயல் செய்ததற்கு பெருமைப்படுகிறேன்! ”என்றார். அவரை சுட்டுக்கொன்றது ஆங்கிலேய படை.