நம் நாட்டில் நடந்த கலவரங்கள், படுகொலைகளில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, நாடு முழுதும் 15 மாநிலங்களில் என்.ஐ.ஏ., தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். இதில், 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த அமைப்பு சார்பில் நாட்டில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக ஆயுதப் பயிற்சி நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், நாடு முழுதும் ஆயுதப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்ட வழக்கில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இப்ராஹிம் புத்தனதானி மீது, புதுடில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உடற்கல்வி வகுப்புகள் என்ற பெயரில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பாடத் திட்டத்தை இப்ராஹிம் வடிவமைத்துள்ளார். இந்த முகாம்களை ஒருங்கிணைக்கவும், பார்வையிடவும், இவர் நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு உள்ளார். இவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என்று கூறினார்.