21 ஏப்ரல் 1917ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர், இதழாசிரியராக இருந்தவர். 12 வயதில் திருமணம் ஆன வசுமதியின் கணவர் இராமசாமி முன்னணி வழக்கறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். மனைவியின் எழுத்தார்வத்துக்கு உறுதுணையாக இருந்தவர். எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தவர். வை. மு. கோதைநாயகி ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன. தினமணிக் கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான “காப்டன் கல்யாணம்’, சமகாலச் சரித்திர நாவல் என்ற வகையில் கல்கியின் “அலை ஓசை’ போலவே குறிப்பிடத்தகுந்த இன்னொரு படைப்பு. காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர். தமிழ் எழுத்தாளரான அவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்ட எழுத்தாளர். படிப்புக்கு வயது தடையல்ல என்ற கருத்துடைய இவர், எழுபது வயதில் திறந்தவெளிப் பல்கலைக் கழக பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தவர். வசுமதி நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் நான்கு புதினங்களையும் எழுதியுள்ளார். அவை பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன.