மணல் கொள்ளையை தடுக்க முயன்றதால் துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில், வி.ஏ.ஓ., படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு மறையும் முன், சேலம் மாவட்டம் ஓமலுாரில் மண் கடத்தல் கும்பலை சேர்ந்தவர், வி.ஏ.ஓ.,வை பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற அராஜக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அரசு ஊழியர்கள் இடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. துாத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை, சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லுார்து பிரான்சிஸ், 56. இவர், முறப்பநாடு, கோவில்பத்து, வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்தார். முறப்பநாட்டில், தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளை குறித்து, கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிர மணியம், 45, மீது, போலீசில் புகார் தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த ராமசுப்ரமணியம், கூட்டாளி மாரிமுத்துவுடன், கடந்த, 25ம் தேதி மதியம், வி.ஏ.ஓ., அலுவலகம் வந்து, லுார்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவம் துாத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தமிழகம் முழுதும், வி.ஏ.ஓ.,க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த வடு மறையும் முன் சேலம் மாவட்டத்தில் மண் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர், வி.ஏ.ஓ., ஒருவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.