காசி தெலுங்கு சங்கமம்

0
102

உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நடைபெறும் காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். ‘கங்கை புஷ்கரலு உற்சவ’ விழாவை முன்னிட்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்து உரையைத் தொடங்கிய பிரதமர், “இங்கு வந்துள்ள அனைவரும் எனது தனிப்பட்ட விருந்தினர்கள். பாரத கலாச்சாரத்தில் விருந்தினர்கள் கடவுளுக்கு நிகரான அந்தஸ்தைக் கொண்டுள்ளனர். உங்களை வரவேற்க நேரில் வர முடியாவிட்டாலும் எனது மனம் உங்கள் அனைவருடனும் உள்ளது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காசி தெலுங்கு கமிட்டி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்மராவ் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காசியின் நதிக்கரைகளில் நடைபெறும் கங்கை – புஷ்கராலு உற்சவம் கங்கையும் கோதாவரியும் சங்கமிப்பது போன்றது. இது பாரதத்தின் பழங்கால நாகரிகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமத்தின் கொண்டாட்டம்” என்றார். சில மாதங்களுக்கு முன்பு இங்கு நடந்த காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் தான் கலந்துகொண்டதை நினைவு கூர்ந்த பிரதமர், “இது விடுதலையின் அமிர்த காலத்தில் பாரதத்தின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரங்களின் சங்கமத்தைக் குறிப்பதாக உள்ளது. இது தேசியத்தின் ஒற்றுமையை உருவாக்குகிறது. இது எதிர்காலத்தில் பாரதத்திற்கு முழு ஆற்றலை உறுதி செய்யும்.

காசிக்கும் அங்கு வசிப்பவர்களும் தெலுங்கு பேசும் மக்களுடன் ஆழமான தொடர்புகளைக் கொண்டுள்ளனர். காசி அவர்களை பல தலைமுறைகளாக வரவேற்று வருகிறது. அந்த உறவு காசி நகரத்தைப் போலவே பழமையானது. காசியில் தெலுங்கு பேசும் பின்னணியில் உள்ளவர்களின் நம்பிக்கை காசியைப் போலவே புனிதமானது. காசிக்கு வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளனர். தெலுங்கு பேசும் மாநிலங்கள் காசிக்கு எத்தனையோ மகான்கள், எத்தனையோ வழிகாட்டிகள் மற்றும் முனிவர்களைக் கொடுத்துள்ளன. காசி மக்களும், யாத்ரீகர்களும் பாபா விஸ்வநாதரை தரிசிக்கச் செல்லும்போது, தைலாங்க் சுவாமியின் ஆசிரமத்திற்கும் சென்று ஆசிர்வாதம் பெறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். தைலாங்க் சுவாமி விஜயநகரத்தில் பிறந்தவர். அவர் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரால் காசியில் வாழும் சிவன் என்று அழைக்கப்பட்டார். இன்றும் காசியில் ஜித்து கிருஷ்ணமூர்த்தி போன்ற பெரிய மகான்கள் அன்புடன் நினைவுகூரப்படுகின்றனர்.

தெலுங்கு மக்களை காசி ஏற்று, புரிந்து கொண்டதைப் போலவே காசியை அந்த மக்கள் தங்கள் ஆன்மாவுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். தட்சிண காசி எனப்படும் புனித தலமாக வெமுலவாடா விளங்குகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள கோயில்களில், கைகளில் கட்டப்படும் கருப்பு நூல், ‘காசிக் கயிறு’ என்றே அழைக்கப்படுகிறது. காசியின் மகிமை தெலுங்கு மொழியிலும் இலக்கியத்திலும் ஆழமாகக் கூறப்பட்டுள்ளது. நீண்ட தூரத்தில் உள்ள ஒரு நகரம் இதயத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது என்பதை வெளிநாட்டவர் நம்புவது கடினமாக இருக்கும். ஆனால், பல நூற்றாண்டுகளாக ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது. அதை உயிர்ப்போடு வைத்திருக்கும் தேசத்தின் பாரம்பரியம் இதுதான்.

காசி என்பது விடுதலை மற்றும் முக்தியின் பூமி. நவீன காலத்தில் சூழ்நிலைகள் வேகமாக மாறிவருகின்றன. ஒருபுறம் காசி விஸ்வநாத ஆலயத்தின் தெய்வீக மகிமையையும் மறுபுறம் கங்கைப் பகுதியின் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காசியின் தெருக்கள் ஒருபுறமும், புதிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு மறுபுறமும் விரிவடைந்து வருகிறது. முந்தைய காலங்களில் காசிக்கு வந்தவர்கள் நகரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை நன்றாக உணர்ந்திருப்பார்கள். புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடியில் மின் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன. நீா்நிலைகள், கோயிலுக்கான வழிகள் மற்றும் நகரத்தின் கலாச்சார மையங்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. கங்கையில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் படகுகளின் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பயன்பெறும் வகையில் கம்பி வட ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தூய்மை இயக்கங்கள் மற்றும் நதிக்கரை தூய்மைக்காக நகரவாசிகள் மற்றும் இளைஞர்களைக் கொண்டு மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

விருந்தினரை வரவேற்பதற்கும், அவா்களுக்கு சேவை செய்வதற்கும் காசி மக்கள் அனைத்து பணிகளையும் செய்வார்கள் .விஸ்வ நாதரின் ஆசீர்வாதம், கால பைரவர் மற்றும் அன்னபூரணியின் தரிசனம் அற்புதமானது. புனித கங்கையில் நீராடுவது உங்கள் ஆன்மாவை மகிழ்விக்கும். லஸ்ஸி, தண்டை, சாட், லிட்டி சோக்கா மற்றும் பனாரசி பான் போன்ற சுவையான உணவுகள் பயணத்தை இன்னும் மறக்க முடியாததாக மாற்றும். பனாரஸ் பட்டுப் புடவைகளையும் ஆந்திரா, தெலங்கான மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

நமது முன்னோர்கள் பாரதத்தின் உணா்வுகளை வெவ்வேறு மையங்களில் நிலைநிறுத்தியுள்ளனர். இவை இணைந்து பாரத அன்னையின் முழு வடிவத்தையும் உருவாக்குகிறது. இத்தகைய புனிதத் தலங்கள் அனைத்தும் பாரதத்தின் முக்கிய மையங்களாகவும், கலாச்சார அடையாளங்களாகவும் உள்ளன. நாட்டின் பன்முகத்தன்மையை முழுமையாகப் பார்க்கும் போதுதான் பாரதத்தின் முழுமையையும் அதன் முழுத் திறன்களையும் உணர முடியும். அப்போதுதான் நம்முடைய முழுத் திறன்களையும் நாம் உணர்ந்து விழிப்புணர்வு பெற முடியும். கங்கை புஷ்கரலு போன்ற விழாக்கள் தேசத்திற்கான சேவை குறித்த நமது தீர்மானங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்” என்று உரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here