ரோமானிய சகாப்தத்தின் கி.பி 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை, சமஸ்கிருத கல்வெட்டு மற்றும் சாதவாகனர்கள் காலத்து நாணயங்கள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த காலத்திலேயே பாரதத்திற்கும் எகிப்துக்கும் இடையே இருந்த பண்டைய உறவுகளைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. ரோமானியப் பேரரசின் பாரதத்துடனான வர்த்தக உறவுகள் பற்றிய தகவல்களை வழங்கும் இது, எகிப்தின் பண்டைய செங்கடல் நகரமான பெரெனிஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து அமெரிக்கக் குழுவினர், பெரனிஸில் உள்ள பழங்கால கோயிலில் அகழாய்வு செய்தபோது ரோமானிய காலத்தைச் சேர்ந்த இதனை கண்டுபிடித்ததாக தொல்பொருட்கள் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோமானிய காலத்தில் எகிப்துக்கும் பாரதத்துக்கும் இடையே வர்த்தக உறவுகள் இருந்ததற்கான முக்கிய அறிகுறிகளை இந்த கண்டுபிடிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த புத்தர் சிலையின் அதன் வலது பக்கத்தின் ஒரு பகுதி மற்றும் அதன் வலது கால் உடைந்துள்ளது. இதன் உயரம் 28 அங்குலம். புத்தரின் தலையைச் சுற்றி ஒளிவட்டமும், பக்கவாட்டில் தாமரை மலரும் செதுக்கப்பட்டுள்ளது. “பெரெனிஸ் ரோமானிய கால எகிப்தின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். இந்த நகரம் டோலமி II பிலடெல்பஸ் (கி.மு 285 முதல் 246 வரை) என்பவரால் நிறுவப்பட்டது, அவர் தனது தாயார் எகிப்தின் பெரெனிஸ் Iன் நினைவாக அதற்குப் பெயரிட்டார். மசாலாப் பொருட்கள், விலையுயர்ந்த கற்கள், ஜவுளிகள் மற்றும் தந்தங்கள் போன்றவற்றுடன் பாரதத்தில் இருந்து வரும் மிகப்பெரிய கப்பல்களுக்கான இடமாகவும் பாரதம், இலங்கை, அரேபியா மற்றும் மேல் எகிப்துக்கான இடையில் முதன்மையான வழித்தடமாகவும் இருந்தது” என்று எகிப்தின் தொல்பொருள் கவுன்சிலின் தலைவர் முஸ்தபா அல் வசிரி கூறியுள்ளார்.
ஆய்வாளர் டாக்டர் மரியஸ் கோயாஸ்டா, “சிலைக்கு பயன்படுத்தப்பட்ட இந்த கல் இஸ்தான்புல்லுக்கு தெற்கே உள்ள ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு இருக்கலாம். பாரதத்தில் இருந்து வந்த வணிகர்கள் இந்த சிலையை உள்நாட்டில் செதுக்கி அருகிலுள்ள கோயிலுக்கு அர்ப்பணித்திருக்கலாம் என்று ஒரு கோட்பாடு கூறுகிறது. இக்கோயிலின் அகழ்வாராய்ச்சியில் கி.மு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க கல்வெட்டுகளுடன் கூடவே, ரோமானிய பேரரசர் பிலிப் அரபு (கி.பி. 244 முதல் 249 வரை) ஆட்சியில் இருந்த சமஸ்கிருத கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பெரெனிஸ் ட்ரோக்லோடிடிகா பகுதியில் மத்திய பாரதத்தின் பெரிய சாம்ராஜ்யங்களுல் ஒன்றான, தக்காணப் பகுதியை அடிப்படையாகக் கொண்ட சாதவாகனர்கள் காலத்தை சேர்ந்த இரண்டு நாணயங்களையும் கண்டுபிடித்துள்ளனர். இவை கி.பி 2ம் நூற்றாண்டை சேர்ந்தவை” என தெரிவித்துள்ளார். பல வருட அரசியல் அமைதியின்மை மற்றும் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு அதன் முக்கிய சுற்றுலாத் துறையை புதுப்பிக்கும் முயற்சிகளுக்கு மத்தியில், எகிப்து சமீபத்திய ஆண்டுகளில் பல முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. 2028 வாக்கில், எகிப்திய அரசு ஆண்டுக்கு 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று நம்புகிறது, இது தொற்றுநோய்க்கு முன்பு 13 மில்லியனாக இருந்தது.