1935 மே 3 அன்று சென்னையில் பிறந்தவர் ரங்கராஜன். பள்ளிக் கல்வி முழுவதையும் ஸ்ரீரங்கத்தில் பெற்றார். அதன் பிறகு திருச்சியிலும் சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப கல்வி மையத்திலும் (எம்.ஐ.டி) உயர் கல்வி பயின்றார். 1980கள் தொடங்கி திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். இந்த அயராத பணிகளுக்கிடையே 2008 பிப்ரவரி 27 அன்று இறக்கும்வரை கதைகள். கட்டுரைகள். நாடகங்கள். பத்திரிகை பத்திகள், கவிதைகள், சங்க இலக்கிய பொழிப்புரை நூல்கள் என எழுதிக்கொண்டே இருந்தார். ரங்கராஜன் என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு எழுத்தாளர் இருந்ததால் தனது மனைவியின் பெயரான சுஜாதாவின் பெயரில் எழுதினார். அதுவே அவருடைய அடையாளமாகிப் போனது. பதின்பருவத்திலிருந்து எழுதத் தொடங்கியவர் சுஜாதா. திருச்சியில் வெளியாகிக்கொண்டிருந்த ‘சிவாஜி’ என்ற சிற்றிதழில் சுஜாதாவின் முதல் கதை பிரசுரமானது. ‘கணையாழியின் கடைசிப் பக்கம்’, ‘கற்றதும் பெற்றதும்’ போன்ற வாராந்திர பத்திகள், ‘ஏன் எதற்கு எப்படி?’ என்ற கேள்வி பதில் தொடர் உள்ளிட்டவற்றின் மூலம் ஆன்மீகம், அரசியல், சினிமா, தொழில்நுட்பம், இலக்கியம், சமூகம் என பல துறைகளில் அவருக்கு இருந்த ஆழமான அறிவையும் விசாலமான பார்வையையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். கணினித் தொழில்நுட்பம் அறிமுகமாகத் தொடங்கிய காலத்தில் அதைப் பற்றி எளிய தமிழில் அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சுஜாதாவின் ஆகச் சிறந்த சமூகப் பங்களிப்பு. ஆன்மீக உன்னதத்தை பற்றி பல நூல்கள் எழுதியவர். ஒரு சகலகலா வல்லவர்.