கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் வடக்கஞ்சேரியை சேர்ந்த சாந்தகுமாரி அம்மா (85), சேவா பாரதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கி சமுதாயத்திற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். அவர், தனது தாயார் மறைந்த பருக்குட்டி அம்மாவின் 60 சென்ட் நிலத்தை, சமூக சேவைத் துறையில் சேவா பாரதியுடன் இணைந்து செயல்படும் நவோதன பரிஷத் அமைப்புக்கு நன்கொடையாக வழங்கினார். பருக்குட்டி அம்மா பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சாந்தகுமாரி அம்மாவின் கணவர் சி. ராதாகிருஷ்ணனும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். வயது முதிர்ந்த காலத்தில் தனிமைப்படுத்தப்படும் மக்களுக்கு ஒரு புகலிட மையம் தொடங்க வேண்டும் என்று பருக்குட்டி அம்மா ஆசைப்பட்டார். இதுகுறித்து ஆலோசித்துவந்த சாந்தகுமாரி அம்மா, சமீபத்தில் சேவா பாரதியின் தீர்மானத்தைப் பற்றி கேள்விப்பட்டார். பிறகு, தனது தாயின் கனவுகளை நனவாக்க சேவாபாரதிதான் சிறந்த தேர்வு என்று முடிவெடுத்தார். இதையடுத்து, தனது நிலத்தை நவோதன பரிஷத்துக்கு தானமாக வழங்கினார். மறைந்த தனது மகன் ஷாஜியின் குழந்தைகளின் முழு அனுமதியுடன் ஆவணங்களை ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் நவோதன பரிஷத் பொருளாளர் சுவாமிநாதன், மணிகண்டன், சுஜித், ஆர்.அசோகன், சூரியஜித், பிரசாத் சக்கிங்கல் ஆகியோர் உடனிருந்தனர்.