#வைத்தியநாத_ஐயர்

0
216

1940 ஆம் ஆண்டு, காஷ்மீரில் நேருஜி கைது செய்யப் பட்ட செய்தியைக் கேட்டதுமே, சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில், மக்கள் வெகுண்டு கடை அடைப்பு நடத்தினர். அப்போது கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகில், சில முஸ்லிம்கள் தங்கள் கடைகளை அடைக்காமல் தகராறுகள் செய்தனர்.
இதனால், மதுரைத் தெற்கு மாசி வீதியில், ஹிந்துக் களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்ளத் தயாராகி விட்டனர். அப்போது தூய வெள்ளைக் கதராடையை அணிந்து, மிக்க எளிமையான உருவத்தில், ஒரு பெரியவர், தனது இருகைகளையும் கூப்பிய வண்ணம் வந்தார்.
“நாம் சகோதரர்களாக வாழ, என் உயிர் தேவையாயின், இதோ உங்கள் முன் நிற்கிறேன், என்னை வெட்டி வீழ்த்தி விடுங்கள். பிறகு நீங்கள் உங்களைத் தாக்கிக் கொள்ளுங்கள்!” எனக் கூறி நின்றார்.
போராட்டக் கலவரம் நடத்த வந்த இரு கோஷ்டியினரும், அந்த கர்ம யோகியைப் பார்த்தனர். மனம் மாறினர். புத்துணர்ச்சியும், சகோதர பாசமும், கரை புரண்டோடின. இருவகுப்பினரும் கலைந்து சென்றனர்.
தம் உயிரையும் துச்சமாக எண்ணி, பணி புரிந்தவர் தான், பழம்பெரும் தேசபக்தரும், தியாகியுமான மதுரை மாநகர் தந்த மாணிக்கம் பிரபல வழக்கறிஞர் ஏ. வைத்தியநாத ஐயராவார்!
1890 ஆம் ஆண்டு, மே மாதம் 16 ஆம் தேதி, புதுக்கோட் டையில் பிறந்த வைத்தியநாத ஐயர், இளமையில் பள்ளியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். அதனால் அவர், தமக்குக் கிடைத்த உதவிப் பணத்தைக் கொண்டு, தமது கல்லூரி மற்றும் சட்டப் படிப்பையும் முடித்து, சிறந்த வழக்கறிஞராக விளங்கினார்.
சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் படிக்கும் போதே, அந்நாளில் நாட்டில் எழுந்த சுதந்திரக் கனல், இவரையும் பற்றி இழுத்தது. சென்னை மெரீனாக் கடற்கரை ‘திலகர்’ கட்டத்தில் நிகழ்ந்த தேசபக்தர் விபின் சந்திரபால் அவர்களின் உரையைக் கேட்டார்.
அவர் உள்ளத்தில் புகைந்துக் கொண்டிருந்த தேசியக்கனல், ஜ்வாலையுடன் வீசத் தொடங்கியது. குறிப்பாக ‘தீண்டாமை ஒழிப்பு’, ‘பட்டியலின முன்னேற்றம்’ இவைகளுக்காகவே, தமது வாழ்வின் முழுமையுமே அர்ப்பணித்தார்.
ராஜாஜி, சென்னை மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, வைத்தியநாத ஐயரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், பட்டியலின மக்களின் ஆலயப் பிரவேசத்தை நடத்தி, சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி அமைச்சர் கக்கன் மற்றும் பல பட்டியலின மக்களுடன், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று, அம்பாளைத் தரிசித்தார்.
தமது வாழ்வின் கடைசி நாள் வரை, “பட்டியலின மக்கள் சங்கத்தின்” தலைவராக விளங்கிய இவரை, ”பட்டியலினச் சகோதரர்களின் தந்தை” என்றே மக்கள் பெரிதும் பாராட்டினர்.
தமது வாழ்நாள் முழுவதும், தேசநலன் மற்றும் பட்டியலின மக்களின் தொண்டு என மிகுந்த வைராக்கியமான எண்ணத்தோடு, தூய்மையாக தன் வாழ்க்கையை நடத்தியவர், 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ல் அமரரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here