சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பெரும் கல்விப் பின்னணி உள்ள குடும்பத்தில் மே 20, 1845 பிறந்தார். இயற்பெயர் காத்தவராயன். இவருடைய தாத்தா, திருக்குறளைத் அச்சு வடிவுக்கு கொண்டு வந்ததில் பெரும் பங்காற்றியவர். காசிமேடு சதாவதானி வைரக்கண் வேலாயுதம் புலவர், வல்லக்காளத்தி வீ.அயோத்தி தாசர் பண்டிதர் ஆகியோரிடமும் கல்வி கற்றார். தன் குரு மீது கொண்ட பற்றால் தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக்கொண்டார். தான் சார்ந்த மக்களின் வாழ்க்கை, சமூகத்தில் அவர்களது நிலை, தீண்டாமைக் கொடுமை, கல்வியறிவின்மை இவற்றைப் பார்த்து வளர்ந்த இவர், அவர்களுக்காகப் போராடுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டார். 1870-ல் நீலகிரியில் அத்வைதானந்த சபையை நிறுவினார். இதன் மூலம் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், மலை ஜாதி பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து ஜாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சென்னையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட முக்கிய காரணமாக இருந்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வி, மதிய உணவு வழங்குவதில் முன்னோடியாக இருந்தார். 1907-ல் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற செய்தி வார இதழைத் தொடங்கினார். இதில் அரசியல், சமூகம், ஜாதி, மதம், இலக்கியம் குறித்து கட்டுரைகளை எழுதினார். பின்னர் இது ‘தமிழன்’ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விடிவெள்ளியாகத் தோன்றி அவர்களின் முன்னேற்றத்துக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அயோத்தி தாசர் 1914-ம் ஆண்டு 69-வது வயதில் மறைந்தார்.