விஜய கரிசல்குளத்தில் நெசவு நெய்ய பயன்படும் உபகரணம் கிடைத்துள்ளது
சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் நடக்கும் இரண்டாம் கட்ட அகழாய்வில், முழு இரும்புடன் கூடிய சுடு மண்ணால் ஆன தக்களி எனும் நெசவு நெய்ய பயன்படும் உபகரணம் கண்டெடுக்கப்பட்டது. விஜய கரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதுவரை 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட, ஆறு குழிகளில் சுடு மண்ணால் ஆன பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி, காதணி உள்ளிட்ட 1,192 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று சுடு மண்ணால் ஆன தக்களி கண்டெடுக்கப்பட்டது. இது முழுமையான இரும்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறியது: முதற்கட்ட அகழாய்வில் தக்களி கிடைத்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட அகழாய்விலும் முழு இரும்புடன் கூடிய, சுடுமண்ணால் ஆன தக்களி கிடைத்துள்ளது. இதன் மூலம் முன்னோர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. இவ்வாறு கூறினார்.