செங்கோல் நிறுவுவதற்கு வரவேற்பு

0
895

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சோழர்கால மாதிரி செங்கோல் நிறுவும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து ஆதீனங்களையும் அழைத்திருப்பது பெருமையான விஷயம் என திருவாவடுதுறை ஆதீனம் 24வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார். மேலும், “நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புதிய மன்னர்கள் பதவியேற்கும்போது, அவர்களுக்கு திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து செங்கோல் வழங்குவது மரபாக இருந்து வந்தது. இதையறிந்த ராஜாஜி, நாடு சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக, முதல் பிரதமராக பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேருவிடம் வழங்குவதற்காக, ஒரு தங்க செங்கோலை செய்து திருவாவடுதுறை ஆதீனத்தின் 20வது சந்நிதானத்திடம் ஆசி பெற்று டெல்லி கொண்டு சென்றார். தன்னுடன் ஆதீனத்திலிருந்து குமாரசாமி தம்பிரான், ஓதுவார் உள்ளிட்டோரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். தேசம் சுதந்திரம் பெற்ற அன்று அந்த செங்கோலை கடைசி வைஸ்ராயான மவுன்ட்பேட்டன், நேருவிடம் வழங்கினார். அதற்கு முன்பாக திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரானால் புனித நீர் தெளிக்கப்பட்டு, கோளறு பதிகம் பாடப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தை நினைவுகூரும் வகையில், டெல்லியில் மே 28ம் தேதி புதிதாக திறக்கப்படவுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவை தலைவர் இருக்கைக்கு அருகே அந்த பழமையான செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள ஆதீனகர்த்தர்களை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம்” என்றார். தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த செங்கோலை, பிரதமர் மோடியிடம் அனைத்து ஆதீனங்களின் ஆசியுடன் திருவாவடுதுறை ஆதீனம் 24வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வழங்கவுள்ளார். இதற்காக ஆதீனகர்த்தர்கள் மே 26 அன்று சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here