புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின் 2ம் கட்ட நிகழ்ச்சிகள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது.அப்போது அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள், பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பிவரவேற்றனர்.பின்னர் நாடாளுமன்றம், செங்கோல் குறித்த குறும்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன.மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் உரையாற்றினார்.புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்புக்கு வாழ்த்து தெரிவித்திருந்த குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் உரைகளை ஹரிவன்ஷ் வாசித்தார்.அதனை தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தையும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும்பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன் பின்னர் திறப்பு விழாவில் உரையாற்றியபிரதமர் மோடி,”புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது.நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பயணத்திலும் அழியாத சில தருணங்கள் வருகின்றன.மே 28 அத்தகைய நாள்.புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற பாரதத்தின் எழுச்சிக்கு சாட்சியாக திகழும்.புதிய நாடாளுமன்றம் என்பது வெறும் கட்டிடம் அல்ல, இது, 140 கோடி பாரத மக்களின் லட்சியத்தின் சின்னம்.இது தேசத்தின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகிற்கு வழங்குகிறது.புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.புதிய நாடாளுமன்றம் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது.புதிய பாதைகளில் பயணம் செய்தே நாம் புதிய மேம்பட்ட குறிக்கோள்களை அடைய முடியும்.புதிய பாதையில் புதிய பயணத்தை நம் நாடு தொடங்கியுள்ளது.உலகமே பாரதத்தை உற்று நோக்குகிறது.பாரதம் முன்னேறினால் அதனுடன் இந்த உலகமும் முன்னேறும்.பாரதத்தின் வளர்ச்சியில் தான், உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது.புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆலயமாக விளங்கும்.நமது தேசத்தை உலக நாடுகள் இன்று நன்மதிப்போடு பார்க்கின்றன.
செங்கோல் புனிதமானது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அதிகார மாற்றத்துக்கான அடையாளமாக செங்கோல் திகழ்கிறது.900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயகப் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது.தமிழக ஆதீனங்களின் ஆசியிடன் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.செங்கோல் என்பது நாம் கடமையின் பாதையில் செல்லவேண்டும் என்பதற்கான அடையாளம்.ராஜாஜி மற்றும் ஆதீனத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் இந்த செங்கோல் உருவாக்கப்பட்டது.மக்களவையில் புனிதமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.இந்த செங்கோலுக்கு என ஒரு வரலாறு உண்டு.எப்போது விவாதம் நடந்தாலும், இச்செங்கோல் நமக்கு நியாயத்தை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்.இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் சுய சார்பு பாரதத்தை ஒளிரச்செய்துள்ளது.புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும், அரசியல் சாசனமும் இணைந்துள்ளது.புதிய நாடாளுமன்றம் காலத்தின் தேவை.பாரதம் பொற்காலத்திற்கு நுழைவதற்குள் நாம் பல தடைகளை தாண்டி வந்துள்ளோம்.புதிய நாடாளுமன்றம் ஏழை, எளிய மக்களின் குரலாக ஒலிக்கும்.கடந்த 9 ஆண்டுகளில் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளது.எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரவுள்ளதால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது.தேசத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுச்செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபதம் ஏற்க வேண்டும்” என கூறினார்.