புதுடில்லியில், புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28ல் திறந்து வைத்தார்.’நவீன தொழில்நுட்பங்களுடன் மிக பிரமாண்டமாகவும், நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டடத்தை பொது மக்கள் சுற்றிப் பார்க்க வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி விருப்பப்படுவதாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை, பிரதமர் அலுவலகமும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அலுவலகமும் செய்து வருகின்றன. இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படுகிறது. இதன் வாயிலாக, பார்லிமென்டை சுற்றிப் பார்ப்பதற்கான நாள், நேரம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.