சுப்பிரமணிய சிவா

0
125

பாரதமாதா கோயில் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதன் நிறுவனர் கண்ட கனவு என்ன தெரியுமா? அவருடைய தியாக வாழ்வைத் தெரிந்து கொண்டால் நமக்குள்ளும் அந்த எண்ணம் கொஞ்சம் ஆக்கிரமிப்பதை நாமே உணர்வோம்!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் – அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக வெளிக் கிளம்பிய போராட்ட வேகத்தைத் தன்னளவில் கொண்டதாக இருந்தது. எங்கும் போராட்ட எழுச்சி, சுதந்திர தாகம் கால் கொள்ளத் தொடங்கியது.

தமிழகமும் சுதேசியப் போராட்ட வேகத்தில் பயணித்தது. பல்வேறு போராட்ட வீரர்களை உருவாக்கியது. வெகுஜன மக்களிடையே தேசிய உணர்வு பீறிட்டெழப் பலர் முயற்சி செய்தனர். தமது சிந்தனையாலும் விடாமுயற்சியாலும் மக்களிடையே எப்போதும் போர் வீரர்களாகக் கனன்று கொண்டிருந்தனர். அந்த வகையில் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதி போன்றவர்கள் தமிழகம் கண்ட பன்முக ஆளுமைகள் கொண்டவர்கள். அவர்களில் சுப்பிரமணிய சிவா, தன்னை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, தீவிர சுதேசக் கிளர்ச்சியாளராக, பத்திரிகை ஆசிரியராக, புரட்சியாளராக, சன்னியாசியாக, சமூக சீர்திருத்தவாதியாக என்று பல தளங்களில் வெளிப்படுத்திக் கொண்டவர்.

இவர், ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 4-10-1884 இல் மதுரை அருகே உள்ள வத்தலக்குண்டு என்ற ஊரில் பிறந்தார். அவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்ற இரண்டு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற சகோதரரும் உண்டு.

ஆசிவாவின் இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை அவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயமுத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காகப் படித்தார். இக்காலமே இவருடைய உள்ளத்தில் தேசபக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் அவர்களின் வீரச்செயல்களைப் பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றினாராம்…

சிவாவின் படிப்பு முடிந்தது. குடும்பச் சுமை காரணமாக சிவகாசியில் போலீஸ் துறையில் குமாஸ்தா வேலையில் சேர்ந்தார். ஆனால் அதற்கு மறுநாளே அந்த வேலையை விட்டு விலகினார். அவர் பார்த்த முதலும் கடைசியுமான வேலை இதுவாகத்தான் இருக்கும்…

1899-இல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. சிவா இல்லறத்தில் நுழைந்தாலும் தேசப் பணியை மறந்து போகவில்லை.

அடுத்த சில வருடங்கள் சிவா திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். அப்போது திருவனந்தபுரம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆங்கில் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் அதிகம் ஏற்படாதவண்ணம் சமஸ்தானம் பார்த்துக் கொண்டு, தன் ராஜவிசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்டது. ஆனால் அங்கு வெளித்தெரியாமல் சுதந்திரக் கனல் பரவலாகக் கனன்று கொண்டிருந்தது.

ஆங்கிலேய அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதற்கான உகந்த சூழல் உருவானபோது, அதனுள் சிவா தன்னை இணைத்துக் கொண்டது காலத்தின் கட்டாயம். திருவனந்தபுரத்தில் வசித்துக் கொண்டிருந்த சிவா, அங்கு சதானந்த சுவாமிகள் என்ற யோகியை சந்தித்தார். இதன் பின்பு சிவத்தின் வாழ்க்கை மாற்றம் பெற்றது. சில காலம் இந்த யோகியிடம் ராஜயோகம் பயின்றார். அந்நாள்வரை ‘சுப்பிரமணிய சர்மா’ என்று அழைக்கப்பட்டு வந்தவரை ‘சுப்பிரமணிய சிவம்’ என்று அழைக்கலானார் சதானந்த சுவாமிகள். பின்னாளில் இந்தப் பெயரே தமிழகம் எங்கும் பிரபலமாயிற்று.

திருவனந்தபுரத்தில் வசித்துக் கொண்டிருக்கும்பொழுதே அரசியலில் சிவம் தீவிரமாகப் பிரவேசிக்கும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டது. 1906, 1907 ஆம் ஆண்டுகளில் வங்காளப் பிரிவினை, அரவிந்தர், திலகர் முதலியோர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்த வழக்குகள், லாலா லஜபதிராய் நாடு கடத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் காரணமாக இந்தியாவெங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் காரணத்தால் மக்களிடையே ஸ்வராஜ்ய தாகம் அதிகரித்தது. தென்னாட்டில் தேசியக் கிளர்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த சந்திரவர்மா நாடெங்கும் சுயராஜ்யப் பிரச்சாரம் செய்து கொண்டு திருவனந்தபுரம் வந்தார். பல கூட்டங்களில் நாட்டு நிலைமையைப் பற்றி விவரித்துப் பேசினார். இந்தக் கூட்டங்களுக்கு தவறாது சென்று வந்த சிவத்தின் உள்ளத்தில் நாட்டுப்பற்று கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. நாட்டின் விடுதலைக்காக அனைத்தையும் அர்ப்பணம் செய்வதாக உறுதி எடுத்துக் கொண்டார் சிவா.

‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற பெயரால் ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். இதன் கூட்டங்கள் தனது வீட்டிலேயே நடைபெற ஏற்பாடு செய்தார். தேசிய உணர்வை வளர்த்தெடுக்கும் வகையில் பத்திரிகைகள் வரவழைத்து இளந்தலைமுறையினர் படிக்க வழிசெய்தார். தனது சமாஜ வேலைகளைத் தவிர, தாமே வெளியிடங்களில் பொதுக்கூட்டங்கள் கூட்டிப் பேசினார். நாட்டின் அவல நிலைமையை மக்களுக்கு எடுத்துக் கூறி பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மக்களைத் தட்டியெழுப்பினார். இதனால் திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகியது.

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர். இவரது பேச்சைக் கேட்ட பல ஆஇளைஞர்கள் தங்களை தேசப் பணியில் இணைத்துக் கொண்டனர். சிவா தன்னுடைய திட்டங்களுக்கு இளைஞர்களும், தொழிலாளர்களுமே பக்க பலமாக இருப்பார்கள் என பலமாக நம்பினார். அதனால் அவர்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டார்.

ஊர்தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த சிவம் திருநெல்வேலியில் சில காலம் தங்கினார். அங்கே வ.உ.சி.க்கு நல்ல செல்வாக்கு இருந்தது. சிவா நடத்திய போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் கண்டு வ.உ.சி சிவாவை மனதாரப் பாராட்டினார். இதனால் இருவருக்குமிடையே நட்பும் வளர்ந்தது. இருவரும் இணை பிரியா போராட்ட வீரர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர்.

அதே காலத்தில்தான் மகாகவி பாரதியுடன் நட்பு கொண்டார் சிவா. இம் மூவருடைய நட்பு, தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் கொண்டது. இவர்கள் மூவரையும் தமிழகத்தின் தேசிய மும்மூர்த்திகள் என்றே குறிப்பிட்டார்கள்.

வ.உ.சி., சுப்பிரமணிய சிவம் முதலியோர் திலகர் குழுவைச் சேர்ந்தவர்கள். திலகரிடத்தில் பரம பக்தி பூண்டவர்கள். ஆனால் அவருடைய மறைவுக்குப் பிறகு தீவிரவாத அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டவர்களென்றே சொல்ல வேண்டும்.

‘தேச பக்தன்’ பத்திரிகை திலகரைப் போற்றியும் அவருடைய கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்தும் வந்தது. அந்த வகையில் சிவாவுக்குத் திருப்தி ஏற்பட்டது. அதற்காக அதன் ஆசிரியர் திரு.வி.க.வை அவர் அடிக்கடி பாராட்டினார். ஆனால், அன்னிபெசன்ட் அம்மையாரை ஆதரித்து எழுதி வருவது அவருக்குப் பிடிக்கவில்லை.

”அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற நாம் முனைந்திருக்கிறோம். அதற்கு ஓர் அன்னிய ஸ்திரீயின் உதவியை நாடுதல் எங்ஙனம் பொருந்தும்? அது பாரத ஜாதியின் தன்மதிப்புக்குக் குறைவல்லவா?” என்று குறிப்பிட்டு அன்னி பெசன்ட் அம்மையார் தலைமை பூண்டிருப்பதை சிவா ஏற்றுக் கொள்ளவில்லை.

சிவாவிடம் சமூகம் சார்ந்த நோக்கும் அதன் வழியே ஆன்மிகத் தேடலும் நிரம்பியிருந்தது. பேச்சு செயல் எல்லாவற்றிலுமே ஒருவித மிடுக்கு காணப்பட்டது. வீரச் செயல்களைச் செய்யாதவன் ஆண் மகனல்லன்’, ‘பலவீனனுக்கும் எளியவனுக்கும் அபயம் கொடுத்து உதவ வேண்டும்’, ‘மூடனையும் மூர்க்கனையும் பலத்தாலேயே வெல்ல வேண்டும்’ இந்த மாதிரி தோரணையிலேயே ‘சுப்பிரமணிய சிவா’ வாழ்ந்து வந்தார்.

வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் இணைந்து திருநெல்வேலி மண்ணை தேசியப் போராட்டக் களமாக மாற்றியிருந்தனர். ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போரிடும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று இருவரும் வர்ணிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள் வெறுப்படைந்தனர். இருவர் மீதும் ஏதாவது வழக்கு போட்டு சிறையில் தள்ளி, திருநெல்வேலி மக்களின் போராட்ட குணத்தை மட்டுப்படுத்த எண்ணினர். காரணம் கட்டபொம்மன், ஊமைத்துரை தொடங்கி அங்கு நடந்த சம்பவங்களால், இயல்பிலேயே சுதந்திர வேட்கை கொண்டிருந்த திருநெல்வேலி மக்கள், இவர்கள் இருவரின் பிரச்சாரத்தால் சுதந்திர வெறி பிடித்து இருந்தனர்.

நாட்டுப் பற்றில்லாதவர்களை, வெள்ளையர்க்கு வால் பிடித்தவர்களை புழுவைப்போல் மதித்தனர் திருநெல்வேலி மக்கள். தேசப்பற்றில்லாதவர்களை வண்டிக்காரர்கள் தங்கள் வண்டிகளில் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள். சல்வைத் தொழிலாளர்களும், சவரம் செய்பவர்களும் அவர்களுக்கு சேவை செய்யமாட்டார்கள். தையல்காரர்கள் துணி தைத்துக் கொடுக்க மாட்டார்கள். கடைக்காரர்கள் அவர்களுக்கு சாமான்கள் எதுவும் கொடுக்க மாட்டார்கள். சுதந்திரப்போராட்ட வேகத்தில் வங்கத்தையும் விஞ்சி நின்றது திருநெல்வேலி. அந்த அளவிற்கு போராட்ட குணத்தை வ.உ.சியும் சிவாவும் வளர்த்திருந்தார்கள்.

இவர்களின் போராட்டக் களத்திற்கு சோதனையாக வந்தது ஒரு சம்பவம்… மகான் அரவிந்தர் என்று பிற்காலத்தில் மிகப் புகழ்பெற்ற ஆன்மிகவாதியாகத் திகழ்ந்த அரவிந்த கோஷ் அப்போது வங்கத்தில் தீவிர சுதந்திரப் போராட்ட வீரராக விளங்கினார். அவர் மீது ஆங்கில் அரசு ஒரு பொய்வழக்கைப் போட்டது. அதற்கு அரசின் தரப்பில் அரசுக்கு சாதகமாக சாட்சி சொல்ல விபின் சந்திரபாலை அரசு வற்புறுத்தியது. ஆனால் தீவிரப் போராளியான விபின் சந்திரபால் அதற்கு மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த அரசு அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்தது.

ஆறு மாதத்திற்குப் பிறகு சிறைமீண்டு வெளிவந்த விபின் சந்திரபாலரை வரவேற்று விழா ஒன்றை நடத்தினார்கள். அந்த விழாவை தூத்துக்குடியில் கொண்டாட வ.உ.சியும் சிவமும் எண்ணினார்கள். அதற்கு ஆங்கில் அரசு நெருக்கடி கொடுத்து, மாஜிஸ்டிரேட் அனுமதி மறுத்தார். ஆனால் தாங்கள் விழா எடுப்பதை யாரும் தடுக்க முடியாது என்று சொல்லி சிறிய நகரான தூத்துக்குடியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்களைக் கூட்டிவிழா எடுத்தார் வ.உ.சி.

இதனால் வெறுப்புற்றது ஆங்கில அரசு. திருநெல்வேலிக்கு வஞ்சகமாக அழைக்கப்பட்ட இவர்கள் இருவரும் திருநெல்வேலி கலெக்டராக இருந்த விஞ்ச் துரையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் திருநெல்வேலியில் கலவரம் மூண்டது. துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

கலவரம் அடங்கிய பிறகு, வ.உ.சி மற்றும் சிதம்பரனார் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதியாக இருந்த பின்ஹே முன் வழக்கு வந்தது.

“சந்நியாச தர்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள், நாட்டு விஷயங்களில் அதுவும் அரசியல் விஷயங்களில் ஈடுபடுவது தவறு” என்று கூறி, சுப்பிரமணிய சிவாவுக்கு எதிராக ஒருவர் புகார் தெரிவித்தார். மேலும் திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலி வந்த சிவா, வ.உ.சியின் இல்லத்தில் தங்கியிருந்தார். அது வர்ணாசிரம தர்மத்திற்கு மாறானது; அவர் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டியவர் என்று நீதிமன்றத்தில் வேறு ஒருவர் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட கருத்துக்கள் எழுந்தபோது, சிவாவின் நிலைப்பாட்டை ஆதரித்து மகாகவி பாரதியார் சந்நியாசமும் சுதேசியமும் என்பது பற்றி பத்திரிகையில் எழுதினார். அதிலிருந்து இந்த வழக்கின் சாராம்சத்தை அறிந்து கொள்ளலாம்….

” திருநெல்வேலியில் ராஜநிந்தனைக் கேஸில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஸ்ரீசுப்பிரமணிய சிவனுக்கு இப்போது வயது 26 க்கு மேல் ஆகவில்லை. இவர் சுமார் 6 வருஷங்களுக்கு முன் அதிபால்யத்திலேயே சிவகாசி சப் டிவிஷன் ஆபீஸிலே முச்சி என்ற தணிந்த உத்தியோகம் பார்த்து வந்தாராம். ஆனால் சரீர சௌக்கியம் போதாதென்று அவரை அந்த வேலையினின்றும் விலக்கி
விட்டார்களாம். இந்த விஷயத்தை திருநெல்வேலிப் போலீஸ் உத்தியோகஸ்தர்கள் பலர் சாக்ஷ¢ கூறும் சமயத்தில் மிக இகழ்ச்சியோடு சொல்லுகிறார்கள்….

இன்னுமொரு போலீஸ்காரர் ஸ்ரீ சிவன் தூத்துக்குடியிலே ஸ்ரீசிதம்பரம் பிள்ளையோடு ஒரே வீட்டில் வாசம் கொண்டிருந்தார் என்றும், இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதமென்றும், ஆதன் பொருட்டு ஸ்ரீ சிவன் ஜாதியினின்றும் பகிஷ்காரம் செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவார் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஓர் போலீஸ்காரருக்கு மனுதர்ம சாஸ்திரத்தில்
இவ்வளவு தூரம் ஆழமான ஞானமிருப்பது பற்றி சந்தோஷமடைகிறோம். அதிவர்ணாசிரமியாக ஸந்யாச நிலை பெற்றவர்களுக்கு வர்ணாசிரம பேதம் கிடையாதென்று இந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது போலும்! போலீஸ் மனு நீதியில் மேற்படி விஷயம் சொல்லப்படவில்லையென்று தோன்றுகிறது…..

மேற்படி சம்பந்தத்தையொட்டி, நமது சுதந்திர முயற்சியிலே கணக்கற்ற சந்நியாசிகள் சேர்ந்திருப்பதைக் குறித்து ஓரிரண்டு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறோம். பிரமஞானியாகிய ஸ்ரீகிருஷ்ண பகவான் மஹாபாரதப் போரிலே சேர்ந்தது போலவும், ஸர்வ பந்தங்களையும் துறந்த ராமதாஸ்முனிவர் மஹாராஜா சிவாஜிக்கு ராஜதந்திரங்கள் சொல்லி வெற்றி கொடுத்தது போலவும், தற்காலத்தில் அநேக துறவிகள் நமது சுதேசீய முயற்சியிலே சேர்ந்திருக்கிறார்கள். காலஞ்சென்ற விவேகானந்த பரமஹம்ஸ மூர்த்தியே இந்த சுயாதீனக் கிளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்….

ஞானி தமது சொந்த நலத்தைக் கருதி உழைக்கக் கூடாதேயொழிய, உலக கர்மங்களை முற்றிலும் விட்டுவிட வேண்டும் என்பது சாஸ்திரக் கருத்தன்று. தன்மட்டில் யாதொரு பலனையும் கருதாமலும், ஈசனுக்கும் ஈசுவர வடிவமாகிய மனித சமூகத்திற்கும் தனது செய்கைகளின் பலன்களை ஸமர்ப்பணம் செய்துவிட்டுத்தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதே
பெரியோர்களின் சித்தாந்தம். அப்படியில்லாவிட்டால் பிரமஞானிகளாகிய முனிவர்கள் ஏன் சாஸ்திரங்கள் எழுதிவைக்க வேண்டும்?
மூச்சைப் பிடித்துக் கொண்டு சும்மா இராமல் உலக நன்மையின் பொருட்டு ஞான வழிகள் கற்பித்த ரிஷிகளை நாம் லௌகீகர்கள் என்று கூறத்தகுமா? அதுபோலவேதான் இக்காலத்திலும் உண்மையான ஸன்னியாசிகளாக இருப்போரும் தம்மை மறந்து தேச §க்ஷமத்தையும் சுயாதீன நிலைமையையும் அடையும் பொருட்டாக முயற்சிகள் செய்துவருகிறார்கள்…..

– இப்படி மகாகவி விளக்கம் கொடுத்து கட்டுரை வரையும் அளவுக்கு அந்த வழக்கு இருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதியின் முன் சிவம் கொடுத்த வாக்குமூலம், அவரது நோக்கு என்ன? அவர் எண்ணம் எப்படிப்பட்டது என்பதை நன்கு தெளிவாக்குகிறது.

”நான் ஒரு சந்யாசி. எனக்கு எதிலும் பற்றில்லை. பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு ஆன்மாவைப் பந்தங்களில் இருந்து விடுவித்து முக்தி அடையச் செய்வதே என் நோக்கம். அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களில் இருந்தும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதேபோன்று ஒரு தேசத்திற்கு முக்கியமானது – அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம், அதை அடையும் மார்க்கம், சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேசக் கல்வி இவையேயாகும்.”

– ஆயினும் வழக்கின் முடிவில் சிவத்துக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் பிரிவ்யு கவுன்ஸில் தலையீட்டின் காரணத்தால் அது ஆறாண்டாகக் குறைக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு உரோமம் அடிக்கும் வேலை கொடுக்கப்பட்டது. இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அங்கிருந்து கோவை, சேலம் என்று மாற்றப்பட்டாலும் அவருக்குத் தொற்றிய தொழுநோய் அவர் உடலை உருக்குலைத்து விட்டது.

சிறையிலிருந்து விடுதலை பெற்ற சிவா சென்னையில் குடியெறினார். சென்னையில் பிரபஞ்ச மித்திரன் என்ற வாரப் பத்திரிகையையும், ஞானபானு என்ற மாதப் பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திரப் போராட்ட ஆயுதமாகத் திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார்.

சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில்தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி மீனாட்சியம்மை உடல்நிலை மோசமாகி 15-5-1915 இல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு தேச உணர்வையூட்டினார். பொதுக் கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்குக் கூட்டமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் பேசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையைத் தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சங்கம் வைத்து ஒவ்வொரு செயலிலும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்துடையவர். குறிக்கோளை அடைய இருவழிகள் உள்ளன. ஒன்று ஆயந்திரங்களை சேதப்படுத்தி நஷ்டப்படுத்துவது, இரண்டு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வது. இதில் இரண்டாவது வழியையே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர் சிவா. அதன் அடிப்படையில் 1920-ல் சென்னையில் நடைபெற்ற ட்ராட் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது தீவிர ஆர்வம் காட்டி தொழிலாளர்களுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

1920-இல் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பால் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார்.

சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ்நாடு என்ற பத்திரிகையில் திலகர் – காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார். காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம் அவருக்கு பல வழிகளில் தொல்லையளித்தது.

1921-ம் வருடம் இரண்டரை வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கியது. பின்னர் 2 வாரங்களில் விடுதலை செய்து விட்டது. பின்னர் 27-11-1922-இல் ஒரு வருட சிறை தண்டனை அளித்தது. கொடுமையான சிறை வாழ்க்கை காரணத்தால் தொழுநோயும் முற்றியது.

சென்னையிலிருந்த சிவம் பத்திரிகை நடத்துவதோடு நின்றுவிடவில்லை. அரசியலிலிருந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தார். திருவல்லிக்கேணி கடற்கரைக்கு திலகர் கட்டம் என்ற பெயரைச் சூட்டியவர் சிவா! திலகர் காட்டிய வழியில் இந்திய சுதந்திரத்தில் தீவிரப் போக்கு கொண்டிருந்த சிவா, சென்னையில் வாழ்ந்த காலத்தில் தம் அரசியல் குருவான திலகரின் பிறந்த தினவிழாவை மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். அவர் அவ்வப்போது வெளியூர்களுக்குச் சென்று அங்கெல்லாம் அரசியல் கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்டி வந்தார்.

சுப்பிரமணிய சிவாவுக்கு ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை எடுக்க வேண்டுமானால் அதற்கு செலவு செய்து மாளாது என்று அறிந்திருந்த டாக்டர் நஞ்சுண்ட ராவ், அவருக்கு இலவசமாகவே சிகிச்சை செய்து, அவருடைய உடல் நோவுக்குத் தகுந்த வைத்தியம் செய்துவந்தார். சிவா தம் வாழ்நாள் முழுக்க மனிதாபிமானமும் நாட்டுப் பற்றும் கொண்ட டாக்டர் நஞ்சுண்ட ராவை மறக்கவில்லை.

தொழுநோயாளிகளை அன்று நடத்திய விதம் மிகக் கொடூரமானது. அவருடைய நோயைக் காரணம் காட்டி சிவாவை ரயிலில் பயணம் செய்யக் கூடாதென்று அரசு தடைவிதித்தது. இதனைக் கண்டு சிவா மனம் கலங்கவில்லை. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் பயணத்தை மேற்கொண்டு மக்களுக்கு அந்நிய ஆட்சியின் கொடுமைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.

சிவா பணம் படைத்தவர் அல்லர்; நல்ல மனம் படைத்தவர். சாதி மத பேதம் வெறுத்து பாரத நாட்டு மக்கள் அனைவரும் பாரத சாதியினர் என்றும் பாரத மாதாவே வழிபடும் தெய்வம் என்றும் கருதினார். அதையே மக்களிடமும் போதித்தார். பாரத மக்கள் அனைவரும் தத்தம் விருப்பப்படி பாரத மாதாவை வணங்குவதற்கு , ”பாரதாஸ்ரமம்” ஒன்றை நிறுவத் திட்டமிட்டார். அத்தகையதோர் ஆசிரமத்தை நிறுவுவதன் மூலம் இந்திய இளைஞர்களிடையே ஒற்றுமையுணர்வையும் தேச பக்தியையும் ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்பினார்.

எனவே பாரதாஸ்ரமம் அமைக்கத் தேவையான நிதி தேடிப் புறப்பட்டார். துறவுக்கோலம் பூண்ட அவர் தம் பெயரை அதற்காக ‘சுதந்தரானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார். ஆனால் அவருடைய இயற்பெயரான சுப்பிரமணிய சிவா என்பதை மக்கள் மறக்கவில்லை; அப்படியே அழைத்தனர்.

பாரதாஸ்ரமத்திற்குத் தேவையான நிதி திரட்ட முதலில் அவர் கும்பகோணத்திற்குப் பயணித்தார். அப்போது அங்கே மகாமகம் நடந்தது. பல இடங்களில் இருந்தும் மக்கள் அங்கே குவிந்தனர். அவர்களிடம் தம் பாரதாஸ்ரமம் பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவர்களிடமிருந்து சுமார் 500 ரூபாய் வரை சேர்ந்தது. …..

கொஞ்சம் கொஞ்சமாகப் பொருள் திரட்டி பாரதாஸ்ரமத்தை நிறுவும் எண்ணம் கொண்டிருந்த சிவா, அதற்காக பல்வேறு கூட்டங்களை நடத்தி, அனல் தெறிக்கும் தம் பேச்சால் மக்களைக் கவர்ந்தார். அவருடைய பேச்சில் அஹிம்சை மற்றும் ஹிம்சை என்பதைக் குறித்த தெளிந்த கருத்துகள் வெளிப்பட்டன.

5.5.1924 அன்று திருவல்லிக்கேணி திலகர் கட்டத்தில் உரையாற்றும்போது சிவா குறிப்பிட்டதிலிருந்து…
அஹிம்சா தர்மத்தின் மூலமாக, பிறர் நம்மை உபத்திரவப்படுத்தி அதை சகித்துக் கொண்டிருப்பதன் மூலமாக மட்டும் ஸ்வராஜ்யம் வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒழுங்கல்ல; புத்திசாலித்தனமுமல்ல; விடுதலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஸ்வராஜ்ய லட்சியந்தான் முக்கியமேயன்றி, வேறில்லை. இப்படிச் சொல்வதற்காக வைதிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆங்கிலேயர்களிடத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. 1906 ஆம் வருஷம் வரையில் பலருக்கு நம்பிக்கையிருந்து வந்தது. அதற்குப் பின் ஒரு புதிய உணர்ச்சி உண்டாகி, சுயநம்பிக்கையால்தான் கதிமோட்சமென்று தெளிந்தனர். திலக மகாராஜர் தகுந்த வழியை அதுமுதல் தேசத்துக்குக் காட்டி வந்தார். இப்போது மகாத்மா காந்தி நமது தலைவராக விளங்குகிறார்.

ஹிம்சை அஹிம்சை பற்றிய சிவாவின் கருத்தில் தெளிவு இருந்தது. அந்தத் தெளிவு அவரை இப்படிப் பேசத் தூண்டியது. அவர் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது தெரிவித்த கருத்து இது…

சுயராஜ்ஜியம் அடைய வேண்டுமென்று ஒரு அடி எடுத்து வைத்து விட்டோம். அதிகாரிகள் நம் மார்பின் மேல் கை கொடுத்துப் பின் தள்ள முயலுகிறார்கள். நாம் அவர்களைப் பின்தள்ளி முன்னே செல்ல வேண்டுமென்று விரும்பவேண்டும். ஏதோ ஒரு திட்டத்தைப் போட்டு விட்டு அது ஒரே வழிதான் உள்ளது என்று கூறுவது, அது என்னுடைய சிற்றறிவிற்கெட்டிய வரை சரி என்று தோன்றவில்லை. சுயராஜ்ஜியம் எந்த வழியில் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்று நான் கூறுவேன்.

ஹிந்துக்களுள் க்ஷத்திரிய ஜாதி என்று ஒன்று இருக்கிறது. தர்மராஜன், ராமர் போன்ற அரசர்கள் இருக்கவில்லையா? அவர்களில்லை என்று நாம் மறுக்க விரும்புகிறோமா? ஆகையால் ஹிம்சையும் ஒரு கொள்கை என்று நான் உணராமலில்லை. சிலர் ஒரே பிடிவாதமாக அஹிம்சை ஒன்றுதான் வழி என்று சொல்கின்றனர். அதை நான் ஒப்புக்கொள்ளவில்லை.

தேச வெறி பிடித்தலைய வேண்டும். இந்த முறையில் வேலை செய்தால் சுயராஜ்ஜியம் சீக்கிரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த அரசாங்கத்தை எந்தெந்த சந்து பொந்துகளில் தாக்கக்கூடுமோ அந்தந்த சந்து பொந்துகளில் எல்லாம் தகுந்த முஸ்தீபுகளுடன் சென்று தாக்கி சிம்மாதனத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது கொள்கை.

சூழ்ச்சியும் கபடமுமுள்ள இந்தக் கவர்ன்மெண்டாரிடம் யோக்கியமான முறையில் காரியம் நடக்க முடியுமா? நான் பலமுறையும் கூறியிருப்பது போல் எந்தச் சந்தர்ப்பத்திலே எந்த இடத்திலே எது கிடைத்தாலும் அதைக்கொண்டு அடிப்பேன். கல்லும் மண்ணும் கிடைத்தாலும் அதை எடுத்து அடிப்பதுதான் முறையாகும். எதிரி ஒருவன் கத்தி எடுத்துக் குத்த வரும்பொழுது, நானும் கத்தி கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருக்க முடியுமா? இப்படி இருக்கப் பட்ட ஆங்கில அரசாங்கம் உயிரற்றும் வெட்கம்கெட்டும் ரோஷமின்றியும் இருக்கின்றது. இதிலிருந்து இவர்கள் உலகத்தவரது அபிப்பிராயத்திற்கு பயப்படமாட்டார்களென்று நினைக்கிறேன்.

தேச ஜனங்களுள் ரோஷம், அஹங்காரம், கோபம், அதிருப்தி முதலியவற்றை உண்டாக்கி லாபமடைய ஒரு யோசனை கூறுகிறேன். அந்நிய நாட்டார் இங்கே வியாபாரம் என்று சொல்லிக் கொண்டு அரசாங்கத்தைக் கைப்பற்றி நடத்துகிறார்கள். அதனை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணம் ஜனங்களுடைய மனதில் பதியும்படி செய்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

……………. சிவாவின் இந்தக் கருத்துக்கள் எல்லாம் இ.பி.கோ 124கி இன் படி ராஜ நிந்தனைக்குரியதாக சென்னை அரசாங்கம் கருதி சிவா மீது வழக்குத் தொடர்ந்தது.

சிறையிலிருந்து வெளியே வந்த சிவா, இம்முறை ஆங்கில அரசுக்கு எதிராக வித்தியாசமான தாக்குதலைத் தொடுக்கத் திட்டமிட்டார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட களம் கிராம பஞ்சாயத்து சபைகள். சின்னஞ்சிறு கிராமங்களில் ஏற்படும் சிறிய வழக்குகளுக்குக் கூட அப்பாவி மக்கள், வெள்ளையர் ஏற்படுத்திய நீதிமன்றங்களை அணுகுவதை சிவா வெறுத்தார். அதனால் மக்கள் அவர்களுக்குள்ளேயே பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள ‘இந்துஸ்தான் பஞ்சாயத்து சபை’ என்ற ஓர் அமைப்பை நிறுவினார். அதன் செயல்பாடுகள் குறித்து அவரே மக்களிடம் பலமாகப் பிரச்சாரம் செய்தார். அவருடைய திட்டம் மக்களிடையே அமோக ஆதரவைப் பெற்றது. இதன் மூலம் அந்தந்த கிராமங்களில் எழும் வழக்குகள் அந்த மன்றங்களிலேயே தீர்த்துக் கொள்ளப் பட்டன. இதையறிந்த ஆங்கில அரசு சிவத்தின் மீது ஆத்திரம் கொண்டது. கிராமங்களில் ஒருவகை இணை ஆட்சியை நிறுவுவதற்கு சிவம் முயற்சி செய்கிறார் என்று குற்றம் சுமத்தி அவருக்கு பிடியாணையை அனுப்பியது.

இருமுறை அனுபவித்த சிறைவாசம் தந்த அனுபவத்தில், சிவா வித்தியாசமாகச் சிந்தித்தார். இனி ஒரு முறை சிறை சென்றால் உயிரோடு திரும்ப முடியாது என்று உணர்ந்த சிவா, ‘இனி நான் இதுபோன்ற விஷயங்களில் தலையிடமாட்டேன்’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு சிறைத் தண்டனையிலிருந்து தப்பி வந்தார்.

ஆனால் அவருடைய பாரதாஸ்ரமத்தை நிறுவும் தாகம் மட்டும் தணியவில்லை. பாரதமாதா ஆலயத்தைப் பிரசாரம் செய்து தென்மாவட்டங்களுக்கும் வடமாவட்டங்களுக்கும் பயணம் செய்தார்.

கொங்குநாட்டில் சிவாவின் பிரச்சார வேகம் பலருடைய உள்ளங்களை அப்படியே அடிபணிய வைத்தது. பாப்பாரப்பட்டி என்ற ஊரில் இருந்த சிவாவின் நண்பரான சின்னமுத்து முதலியார், சிவாவிடம் சொன்னார்…. ”நீங்கள் பாப்பாரப்பட்டிக்கே வந்து தங்குவதாக இருந்தால், மக்களின் உதவி பெற்று பாரதமாதா கோயில் நிர்மாணிக்கவும் பாரதாஸ்ரமம் நிறுவவும் உதவி செய்ய முடியும். உங்கள் இருப்பிடத்தை சென்னையிலிருந்து பாப்பாரப்பட்டிக்கு மாற்றிக்கொள்ளுங்கள்’’ என்றார்.

சிவா தம் கனவு நனவாவதற்காக அதற்கு இசைந்தார். சின்னமுத்து முதலியார் தாம் சொன்ன சொல்லைக் காப்பாற்றி, பாப்பாரப்பட்டி கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஏழு ஏக்கர் பரப்பளவுள்ள இஆடத்தை வாங்கி பாரதாஸ்ரமம் கட்டக் கொடுத்தார். இதனால் மகிழ்ந்த சிவா, பாப்பாரப்பட்டி கிராம மக்கள் பரிவோடு வழங்கிய அந்த இடத்திற்கு பாரதபுரம் என்று பெயரிட்டு, பாரதாஸ்ரமத்தை நிறுவினார். அந்தச் சமயம் நாடு முழுவதும் தம் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சிக்கு ஆதரவு தேடி சுற்றுப்பயணம் செய்துவந்த சித்தரஞ்சன் தாஸைக் கொண்டே பாரத தேவி கோயிலுக்கு அடிக்கல் நாட்டச் செய்தார். சிவாவின் நல்ல நோக்கம் அறிந்த சித்தரஞ்சன் தாஸ், தம்மால் இயன்ற சிறிய தொகையை நன்கொடையாகக் கொடுத்து, அவரை பாராட்டிச் சென்றாராம்.

சிவா அமைக்க விரும்பிய பாரதாசிரமத்தைப் பற்றியும் அதன் குறிக்கோள் அமைப்பு விதிகள் பற்றியும் திரு.வி.க நடத்திவந்த நவசக்தி இதழில் ஒரு அறிக்கை வெளிவந்தது. இந்தப் பாரதாசிரமத்தில் துவக்கத்தில் எட்டு பேர் இருக்கின்றனர் என்றும், அவர்கள் தங்களை தேசப்பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் உணவுக்காக (பழங்காலத்திய ஆசிரம வாழ்க்கை முறையைப்போல்) பாரதியாரின் பாடல்களை வீதியில் பாடிக்கொண்டு, தங்கள் தேவைக்குத் தக்க அரிசியும் பொருளும் பிச்சையாக ஏற்று, மிகுதியான நேரத்தில் தேசத்தொண்டு புரிவதையே வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ளனர் என்று உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டிருக்கின்றனர்.

இந்த அறிக்கையின் முகப்பில், ஓம், வந்தேமாதரம், அல்லாஹ¤ அக்பர் என்று வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு, ஸ்ரீ பாரதாசிரமம் (தலைமை ஸ்தானம்) பாரதபுரி, பாப்பாரப்பட்டி போஸ்டு, சேலம் ஜில்லா,
அதிபர் : பிரஹ்மஸ்ரீ சுப்பிரமணிய சிவம்

என்று தலைப்பிடப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் இருந்து…
இவ்வாசிரமத்தில் சேர விரும்புவோர் உட்படவேண்டிய நிபந்தனைகள்:-

1. எனது தேசமாகிய பாரதநாடு எவ்விதத்திலும் எவருக்கும் கட்டுப்படாத ஸ்வராஜ்யம் அடைகிற வரையில் இவ்வாசிரமத்தின் அதிபருடைய உத்தரவின்றி தேச சேவையைத் தவிர வேறு எத்தொழிலிலும் பிரவேசிப்பதில்லையென்று உறுதி கூறுகிறேன்.

2. நமது நாடு ஸ்வராஜ்யம் அடைஆயும் வரையில் நான் எங்கிருந்தாலும் இந்த ஆசிரமத்தின் ஓர் அங்கத்தினனாயிருந்து ஆசிரமத்துக் கொள்கைகளையே பின்பற்றியும் பிரசாரம் செய்தும் வருவேன் என்று உறுதி கூறுகிறேன்.

3. எனது சகோதர அங்கத்தினர்களுக்கு நான் எவ்வித லாப நஷ்டத்தையும் பாராமல் திரிகரணசுத்தியாக என்னாலியன்ற உதவியெல்லாம் செய்யத் தவறேன்.

4. அறிவு, அன்பு, ஆண்மை என்னும் முப்பெருந்தன்மைகளையும் பெருக்கிக் கொள்வதற்கும், இவற்றை பிரசாரம் செய்வதற்கும் எப்பொழுதும் முயல்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

5. நமது நாடு ஸ்வராஜ்யம் அடையும் வரையில் அநாவசியமான விளையாட்டுக்களிலும் பரிகாசங்களிலும் வெறும் பேச்சுகளிலும் நான் ஒரு நிமிஷமும் செலவழிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

6. இப்பாரத நாட்டிடைப் பிறக்கும்படியான பாக்கியம் பெற்ற எல்லோரிடமும் எவ்வித ஜாதிமத பேதமும் பாராட்டாமல் உடன்பிறந்த சகோதரர்களாகப் பாவித்து ஒரே மாதிரியான அன்பு செலுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன்.

7. லாகிரி வஸ்துக்களை வைத்திய நிபுணர்களால் வேறு வழியில்லாது விதிக்கப்பெற்றாலொழிய வேறு எக்காரணத்தை முன்னிட்டும் உட்கொள்வதில்லை என்று உறுதி கூறுகிறேன்.

8. ஆசிரமத்தின் அதிபரிடம் பரிபூர்ண நம்பிக்கை வைத்திருக்கிறேனென்றும் சந்தர்ப்பங்கட்கேற்றவாறு அவர் அனுமதிக்கின்றபடி நடந்து கொள்வேனென்றும் உறுதி கூறுகிறேன்.

9. இவ்வுறுதிமொழிகளை நான் காப்பாற்றாது போவேனானால் முற்காலத்திய, தற்காலத்திய, பிற்காலத்திய மகான்களுடையவும், தேசபக்தர்களுடையவும் சாப கோபங்கட்குப் பாத்திரனாவேனாக!

சுப்பிரமணிய சிவா கட்டத் தீர்மனித்திருந்த தமது கனவுக் கோயிலான பாரதமாதா ஆலயம் பற்றி பெரிய அளவில் பிரச்சாரம் செய்து வந்தார். அவருடைய கனவுப்படி இஆந்த பாரதமாதா ஆலயத்தில் அர்ச்சகருக்கு வேலை இல்லை. ஆலயத்தின் பணம் கொண்டு ஏழைகளுக்கு உதவ தொழிற்சாலைகள் நிறுவப்பெறும் எனும் புரட்சிகர அம்சங்களையும் முன்னிறுத்தி சிவா வெளியிட்ட ஒரு அறிக்கையிலிருந்து….

நமது தேசத்து இப்பொழுதைய நிலைமையில் இப்பொழுது வழங்கப்படும் நாணயமானது ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அடிக்கடி பயன்பட்டுக்கொண்டே இருக்கும்படியான மாதிரியில் (சுற்றிக்கொண்டே இருக்கும்படியான கைமாற்று வழியில் ) உபயோகிக்கப்பட வேண்டுமே தவிர ஓரிடத்தில் பொன்னாலோ வெள்ளியாலோ கல்லாலோ கட்டடமாகவே குவிந்து கிடக்கும்படி விட்டு விடுவது அவ்வளவு நன்றன்று என்பது என் அபிப்பிராயம்.

ஆகையால் இவ்வாலயத்துக்கு பக்த கோடிகளால் பண்புடன் வழங்கப்படும் பணமானது கல்விச் சாலைகளோ கைத்தொழிற்சாலைகளோ நம் ஏழைச் சகோதரர்களுக்கு இப்பொழுதைய நிலைமையில் உபயோகப்படும்படியான வேறு எந்த ஸ்தாபனங்களோ ஏற்படுத்துவதற்கு உபயோகப்படும். ஸ்ரீபாரத தேவியின் ஆலயத்தில் ஒரு லக்ஷம் ஆபரணங்களாகக் குவிந்து சொத்தாயிருப்பதைவிட ஒரு லக்ஷம் ரூபாய் மூலதனத்துடன் ஏதேனும் ஒரு கைத்தொழிற்சாலை நடந்து வரும்படி செய்தால் அது ஆலயத்துக்கு ஸ்திர சொத்தாகவும் இருக்கவும் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு வேலை கொடுத்து அவர்கள் பிழைப்பதற்கு ஒரு வழியாகவும் ஏற்படுமாகையால் இது சிறந்ததல்லவா?

இன்னும் இந்த ஆலயத்தில் அன்னைக்கும் அவருடைய புத்திரர்களுக்கும் இடையில் மத்தியஸ்தமோ அல்லது சிபார்சையோ செய்வதற்கு அர்ச்சகர் என்ற பெயருடன் எவரும் இருக்க மாட்டார்கள். அவரவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதாவை பூஜித்துக் கொண்டு போகலாம்.

இப்படி தேசத்தையே தெய்வமாக வணங்கினால், சமய வேறுபாடு கடந்து மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று கருதினார் சுப்பிரமணிய சிவா. ஆனால் அவரின் பாரதமாதா ஆலயம் என்ற கனவு நனவாகாமலேயே போனது. சிவா 1921இஆல் சின்னமுத்து முதலியாருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய மனக்கோட்டை தகர்ந்து போனதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

”எனது வாழ்நாட்களை எல்லாம் அர்ப்பணம் வாங்கிக் கொண்ட, தமிழ்நாட்டிலே என்னை கவனிப்பவர் இல்லாது போய்விட்டது.’’ என்று உளம் நொந்து புலம்பியிருக்கிறார். ஆங்கிலேய அடக்குமுறையும் வறுமையும் உடல் நோவும் அவர் வாழ்வையும் பணியையும் வருத்திக் குலைத்த போதும், தம் போராட்ட குணத்தைத் தளர விடாமல் இருந்தவர் சிவா. செல்வந்தர் பலர் இருந்த அந்நாட்களில் பாரதமாதா ஆலயம் போன்ற புரட்சிகர நோக்குகளைக் கொண்ட இப்பணிக்கு பெருமளவில் யாரும் சிவாவுக்கு பெரும் பொருள் கொடுத்து உதவவில்லை.

தன்னுடைய கனவு முழுமையாக நிறைவேறாத நிலையிலேயே மனது சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த சிவா, பல்வேறு ஊர்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இருப்பினும் நோய் முற்றிய நிலையில் தம் பாரதாஸ்ரமத்திலேயே உயிரை விட விருப்பம் கொண்டு, அங்கே வந்தார். 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் இவ்வுலக வாழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளைச் செய்து முடித்துள்ளார்.

சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியைப் பரப்பினார். ராமகிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்டிருந்த சிவா, அவர்களுடைய நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். இப்படிப்பட்ட பன்முகத் திறமை கொண்ட பேரறிவாளர்களின் தியாகத்தால் கிடைத்த சுதந்திர நாட்டில் வாழும் நாம், அவர்களின் தியாக வாழ்வைப் போற்றி அஞ்சலி செய்வோம்.

…………. செங்கோட்டை ஸ்ரீராம்சுப்பிரமணிய சிவா

…………. செங்கோட்டை ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here