துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, சேரன் மகாதேவி வட்டம், ஓமநல்லுார் பகுதியில் உள்ள, 85 ஏக்கர் நிலத்தை, 210 பேர் குத்தகைக்கு எடுத்துஇருந்தனர். அவர்கள் குத்தகை தொகைக்கு பதில் தானியமாக வழங்கி வந்தனர். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் கோவிலுக்கு எதுவும் வழங்கவில்லை. குத்தகை தாரர்களிடம் இருந்து நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோவில் இணை கமிஷனர் தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள், வருவாய் துறையினர் முன்னிலையில், 85 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு, 85 கோடி ரூபாய்.
நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், சித்தாய்மூர், சுவர்ணதாபனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, 26 ஏக்கர் நிலம் திருத்துறைப்பூண்டி வட்டம், தில்லைவிளாகம் கிராமத்தில் உள்ளது. அதிலுள்ள புன்செய் நிலத்தில், 16 பேர் வீடுகள் கட்டியும், நன்செய் நிலத்தை தனிநபர் ஒருவரும் ஆக்கிரமித்திருந்தனர். அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் குமரேசன் முன்னிலையில் நிலங்கள் மீட்கப்பட்டன. அதன் மதிப்பு, 8.28 கோடி ரூபாய்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காடு அனுமந்தராயர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலம் மற்றும் அதன் உபக்கோவிலான கோனாபுரம், லட்சுமி நாராயண சுவாமி கோவிலுக்கு சொந்தமான, இரண்டு ஏக்கர் நிலம் தனிநபர் பெயரில் பட்டா பெறப்பட்டிருந்தது. இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்களுக்கு சாதகமாக பட்டா மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. திருப்பூர் மண்டல இணை கமிஷனர் உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டு சுவாதீனம் பெறப்பட்டது. அதன், மதிப்பு 3 கோடி ரூபாய்.