ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

0
126

ஸ்ரீஹரிகோட்டா,
நம் நாட்டு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக கிளையான ‘நியு ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ (என்.எஸ்.ஐ.எல்) வணிக ரீதியிலான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகிறது. அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டி.எஸ்.-சாட்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 360 கிலோ எடை கொண்ட ‘டி.எஸ்.- சாட்’ ‘சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார்’ என்ற தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. அதாவது, பகல், இரவு என அனைத்து காலங்களிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். ‘வெலாக்ஸ்-ஏ.எம்.’ (23 கிலோ), ‘ஆர்கேட்’ (24 கிலோ), ‘ஸ்கூப்’-2(4கி), ‘நியூலயன்’ (3கி), ‘கலாசியா'(3.5கி), ‘ஆர்ப்’-12 ‘ஸ்டிரைடர்'(13கி) ஆகிய 6 செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, நேற்று காலை 6.30 மணிக்கு தீ பிழம்பை கக்கியவாறு பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் புறப்பட்ட 21 நிமிடம் 19 வினாடியில் திட்டமிட்டபடி பூமியில் இருந்து 536 கி.மீ. தொலைவில் ‘டி.எஸ்.- சாட்’ செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.பி.எஸ்.எல்.வி. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here