மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி கோயிலில் செப்., 3ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. சிவனை மதியாமல் நடந்த தட்சன் வேள்வியில் கலந்துகொண்ட உமாதேவியார் அந்தப்பாவம் நீங்க பரிகாரம் தேடினார். துலாக்காவிரி நதிக்கரையில் உள்ள மாமரத்தோப்பில் சுயம்புவாக உள்ள லிங்கத்தை பூஜை செய்துவந்தால் பாவங்கள் நீங்கும் என்றார் சிவபெருமான். அதைக்கேட்ட பார்வதி மயில் உருவம் கொண்டு சிவபூஜை செய்தார். அதில் மகிழ்ந்த சிவபெருமான் ஆண் மயிலாக அம்பிகைக்கு காட்சியருள இருவரும் மயூரதாண்டவம் ஆடினர். இதனால் அந்த இடத்திற்கு மாயூரம் என்றும் மயிலாடுதுறை என்றும் பெயர் வந்தது. ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் தேவாரம் பாடிய தலம். அருணகிரிநாதர் இத்தலத்து ஷண்முகர்மீது திருப்புகழ் பாடியுள்ளார். நல்லத்துக்குடி கிருஷ்ண ஐயர் அம்பிகைமீது அபயாம்பிகை சதகம் எனும் நூறு பாடல்கள் பாடியுள்ளார். முத்துசாமி தீட்சிதர் நவாவரண கீர்த்தனை பாடி அம்மையை வழிபட்டுள்ளார். திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான இந்த அபயாம்பிகை சமேத மாயூரநாதசுவாமி திருக்கோயில். இதற்காக உத்தமபட்சயாகம் என்று சொல்லக்கூடிய 33 குண்டங்கள் கொண்ட யாகசாலை சுவாமிக்கும் அம்பாளுக்கும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 118 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு எட்டுகால வேள்விகள் நடத்தப்பட உள்ளன. நாற்பது வேதவிற்பன்னர்கள் வேதபாராயணமும், 108 ஓதுவார்கள் தேவாரம் திருவாசகங்களை ஆக., 30 முதல் செப்., 3 வரை தொடர்ந்து பாராயணம் செய்யவுள்ளனர். ஆக., 27 காலை கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. ஆக., 28, 29 பூர்வாங்க பூஜைகளும், 30 காலை காவிரியிலிருந்து புனிதநீர் கொண்டு வருதல், அன்று மாலை யாகசாலை வேள்விகள் துவங்குகின்றன. செப்., 3 காலை வரை எட்டுகால யாகங்கள் நடக்கின்றன. செப்.,3 காலை மகாகும்பாபிஷேகமும், மாலை திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கின்றன.