ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் குறித்து தென்தமிழக தலைவர் திரு ஆடலரசன் அவர்களின் பத்திரிகை செய்தி வெளியிட்டார்

0
4404

பாரத தேசத்தை உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்தோடு கடந்த 98 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்).தேசபக்தி மிகுந்த, சுயநலமற்ற மக்கள் சேவையே மகேசன் சேவை என்று பாடுபட்டு வரும் கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ்.

பூகம்பம், புயல், வெள்ளம், சுனாமி, விபத்துகள் பெருந்தொற்று போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும் போது உடனடியாக களத்திற்கு சென்று மக்களை மீட்டு அவர்களின் துயர் துடைக்கும் பணியில் சங்கத்தின் தொண்டர்கள் ஜாதி, மத, மொழி, இன பாகுபாடின்றி தொண்டாற்றி வருவதை மக்கள் அறிவார்கள்.

ஆர்.எஸ்.எஸ் துவங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டும் தேசத்திற்காக பாடுபட்ட மகான்களின் நினைவை போற்றும் வகையிலும் ஆண்டுதோறும் சீருடை அணிந்த ஆர் எஸ்.எஸ்.தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். சங்கம் துவங்கியதிலிருந்தே இத்தகைய ஊர்வலங்கள் நாடு முழுவதும் நடக்கிறது.

காஷ்மீர் மாநிலம் முதல், கேரளா, மேற்குவங்கம் என்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அணிவகுப்பு ஊர்வலங்கள் அமைதியாகவும் நேர்த்தியாகவும் நடந்து வருகின்றன. 1963ம் ஆண்டு டில்லி குடியரசு தின ஊர்வலத்தில் ராணுவத்தினருடன் சேர்த்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களையும் பங்கேற்க அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அழைப்பு விடுத்தார் அதையேற்று 3000 ஆர். எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடையணிந்து குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊர்வலத்திற்கு சமீப காலமாக காவல் துறையினர் அனுமதி மறுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமகன்களை உருவாக்கி வரும் சங்கம், காவல் துறையின் தடையை மீறாமல் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை நீதிமன்றங்களின் மூலம் பெற்றே அணிவகுப்பு ஊர்வலத்தை கடந்த ஆண்டு தமிழகத்தில் மாவட்டம் தோறும் நடத்தியது.

இந்த ஆண்டு விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலத்தை இன்று (22.10.2023) நடத்திய முடிவு செய்து காவல் துறையிடம் இரு மாதங்களுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இதில் பங்குபெற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ஆர்வத்துடன் தயாராகி வந்தனர். ஆனால் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தினர். ஒரு சில மாவட்டங்களில் விண்ணப்பங்களை நிராகரித்தனர். இதைதொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்திரவிட்ட உயர்நீதிமன்றம், அனுமதியை நிகழ்ச்சி நடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் காவல் துறையினர் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கடிதத்தை வழங்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, தேனி, திண்டுகல், கன்னியாகுமரி,தஞ்சை, விருதுநகர், கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆகிய அதிகாரிகளின் மீது மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் அணிவகுப்பு ஊர்வலத்திற்கான அனுமதியை பெற ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையான அணிவகுப்பு ஊர்வலத்தை உரிய அனுமதி பெற்று விரைவில் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

ஆடலரசன்,
மாநில தலைவர்,
ஆர்.எஸ்.எஸ்., தென்தமிழகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here