யுனெஸ்கோவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் கேரளாவின் கோழிக்கோடும், மத்தியப் பிரதேசத்தின் குவாலியரும் இணைந்திருப்பதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு, உலகின் சிறந்த 55 நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ வெளியிட்டிருக்கிறது. இதில் கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு நகரமும், மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் நகரமும் இடம் பிடித்திருக்கின்றன. இதற்கு பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டீஸ் பட்டியலில் இணைந்திருப்பதின் மூலம், இந்தியாவின் கலாச்சாரம், கோழிக்கோட்டின் வளமான இலக்கிய மரபு மற்றும் குவாலியரின் மெல்லிசை பாரம்பரியம் ஆகியவை உலகளாவிய அரங்கில் பிரகாசமாக ஒளிர்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக கோழிக்கோடு மற்றும் குவாலியர் மக்களுக்கு வாழ்த்துகள்!
இந்த சர்வதேச அங்கீகாரத்தை நாம் கொண்டாடும் வேளையில், நமது பன்முக கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை நமது நாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த பாராட்டுக்கள் நமது தனித்துவமான கலாச்சார கதைகளை வளர்ப்பதற்கும் பகிர்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபரின் கூட்டு முயற்சிகளையும் பிரதிபலிக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டீஸ் பட்டியலில் குவாலியரும் கோழிக்கோடும் இணைந்திருப்பது நமது தேசத்திற்கு மற்றொரு மகிழ்ச்சியான தருணம். குவாலியரின் புகழ்பெற்ற இசை பாரம்பரியத்தை கவனத்தில் கொண்டு, இந்த நகரம் ‘இசை நகரமாக’ நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவின் கோழிக்கோடு ‘இலக்கிய நகரம்’ என்று யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நமது படைப்பாற்றலுக்கான உலகளாவிய இந்த அங்கீகாரம், நமது கவிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் படைப்புத் தேடலைப் புதுப்பிக்கும் அதேவேளையில் நமது கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்தும்” என்று தெரிவித்திருக்கிறார்.