இந்தியாவின் ஆன்மிக அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அறியாதவர்கள் அடிமை மனப்பான்மையை விட முடியாமல் இருக்கின்றனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், துறவி மீராபாயின் 525-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், ‘சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உத்தரப் பிரதேசத்துக்குச் சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மதுராவிலுள்ள ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமியில் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, துறவி மீரா பாயின் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு உரையாற்றுகையில், “பிரஜுக்கும் குஜராத்துக்கும் தனித் தொடர்பு உள்ளது. மதுராவின் கன்ஹா குஜராத் சென்ற பிறகு துவாரகதீஷ் ஆனார். அதேபோல, ராஜஸ்தானில் இருந்து மதுரா வந்த புனித மீரா பாய், துவாரகாவில் தனது கடைசி காலங்களைக் கழித்தார்.
பிருந்தாவனம் இல்லாமல் புனித மீராவின் வழிபாடு முழுமையடையாது. நமது மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக, மீரா பாய் குடும்பமும், ராஜஸ்தான் மக்களும் தங்களிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்தார்கள். இந்தியாவின் ஆன்மாவைக் காக்க ராஜஸ்தான் மக்களிடையே சுவர் போல நின்றார்கள். அந்தத் தியாகத்தையும், வீரத்தையும் இந்த நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது.
இந்தப் பகுதி (பிராஜின்) பாதகமான காலங்களில் நாட்டைக் கவனித்துக் கொண்டது. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்தபோது, பிரஜுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. ஆகவே, இந்திய வரலாற்றிலிருந்து மக்கள் துண்டிக்க விரும்பினர். இந்தியாவின் ஆன்மிக அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அறியாதவர்கள், அடிமை மனப்பான்மையை விட முடியாமல் இருந்து வருகிறார்கள்.
எவ்வித வளர்ச்சியுமின்றி பிரஜை வைத்திருந்தார்கள். இன்று ஆசாதி கா அமிர்தகாலத்தில், அடிமை மனநிலையிலிருந்து நாடு வெளியே வருகிறது. நாம் நம் பாரம்பரியத்தில் பெருமையுடன் முன்னோக்கி செல்கிறோம். காசியில் விஸ்வநாதர் கோவிலும், உஜ்ஜைனி மகாகால் கோவில் பிரமாண்டமும் முழு மகிமையுடன் நம் முன்னே உள்ளது.
தற்போது, அயோத்தியில் இராமர் கோவில் திறப்பு விழா தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரா மற்றும் பிரஜ் இந்த வளர்ச்சியின் சங்கிலியில் இரு்து பின்தங்க விடமாட்டேன். மதுராவில் தரிசனம் விரைவில் இன்னும் கூடுதலான தெய்வீகத்துடன் நடக்கும்” என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்று பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “உலகின் 190 நாடுகளில் யோகாவை பரப்பினீர்கள். கடந்த 9 ஆண்டுகளாக மதுரா, பிருந்தாவனம் மற்றும் அனைத்து யாத்ரீக ஸ்தலங்களும் பலன் பெறுகின்றன. மேலும், அயோத்தியில் சாத்தியமில்லாத ஒன்று ஜனவரி 22-ம் தேதியன்று உங்கள் தலைமையில் நடக்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.