ஆர்.எஸ்.எஸ். சார்பில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா

0
13148

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு நீதிமன்றம் மூலம் போராடி, வாதாடி அனுமதி பெற்றுத் தந்த சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழக அரசும், காவல்துறையும் அனுமதி மறுத்து வந்தன. எனவே, அந்த இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலர் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் போராடி அனுமதி பெற்றுத் தந்தனர்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் கடந்த 19-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெற்றுத் தந்த வழக்கறிஞர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை சேத்துப்பட்டில் அமைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திலுள்ள சக்தி அரங்கில் நடைபெற்ற விழாவில், மூத்த வழக்கறிஞர்கள் ஏ.என்.ராஜா, ராஜகோபால், கார்த்திகேயன் உட்பட 79 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் ராஜேஷ் விவேகானந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மக்கள் தொடர்பு மாநில இணைச் செயலாளர் இராம இராஜசேகர் வரவேற்றார். மாநில அமைப்பாளர் பூ.மு.ரவிக்குமார் வழக்கறிஞர்களை பாராட்டி தொடக்க உரையாற்றினார். விழாவில் கலந்து கொண்ட அனைத்து வழக்கறிஞர்களும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளால் புத்தகங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் பிறகு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவங்களையும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவங்களையும், காவல்துறையையும், அரசு அதிகாரிகளையும் எதிர்கொண்ட விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ரபு மனோகர் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட 1925-ம் ஆண்டு முதல் சீருடை அணிவகுப்பை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகளில் வன்முறைகள் நடந்ததாக எந்த வரலாறும் இல்லை.

தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினார். ஆனால், 2021-ல் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடித்தான் அனுமதி பெற வேண்டி இருக்கிறது.

இந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும், தி.மு.க. அரசின் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நவம்பர் 19-ம் தேதி தமிழகத்தில் 53 இடங்களில் வெற்றிகரமாக அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தைத் தடுக்க தி.மு.க. அரசின் காவல்துறை அனைத்து அடக்குமுறைகளையும் கையாண்டது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளுக்கு 10-க்கும் மேற்பட்ட காவலர்களுடன் நள்ளிரவு நேரத்தில் சென்று அச்சத்தை ஏற்படுத்தினர்.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துக் கட்டுப்பாடுகள், வழிமுறைகளை பின்பற்றினோம். ஆனாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்தனர். நீதிமன்றம் அனுமதித்தும் இசைக் கருவிகளை வாசிக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்.

பொருத்தமில்லாத காரணங்களைக் கூறி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மட்டுமல்லாது சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். எவ்வித அடக்குமுறைக்கும் அஞ்சக்கூடிய இயக்கம் அல்ல. அரசு தரும் நெருக்கடிகளை பயிற்சியாக எடுத்துக் கொண்டு இன்னும் கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்ட இயக்கம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here