காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்ட நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாராணசிக்குச் செல்லவிருக்கிறார்.
கலாச்சார மையங்களாகத் திகழும் வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது, வாரணாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மிகச்சிறந்த அனுபவங்களை பெற்றனர்.
இந்த நிலையில், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்ட நிகழ்வை மார்கழி மாதத்தின் முதல்நாளான வருகிற டிசம்பர் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்தி மோடி வாரணாசிக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கட்டிங் மெமோரியல் இன்டர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விக்ஷித் பாரத் சங்கல்ப யாத்திரை கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.
பிறகு, டிசம்பர் 17-ம் தேதி தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்டத்தின் ஒரு பகுதியாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெற உள்ள நமோ காட் பகுதிக்குச் செல்கிறார். டிசம்பர் 18-ம் தேதி வாராணசியில் உள்ள ஸ்வர்வேட் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.