கோவை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி, அயோத்தியில் நடந்த விழாவில் கொடியசைத்து துவக்கி வைத்தார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.22ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து பக்தர்களின் வசதிக்காக அந்நகர ரயில் நிலையம் ரூ.240 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, புட் பிளாசா, பூஜை கடை, லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன், குழந்தை பராமரிப்பு அறை, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடம், பயணிகள் நுழையவும், வெளியேறவும் தனி வாயில் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்ததுடன் அதனை பார்வையிட்டார். தொடர்ந்து, கோவை – பெங்களூரு உள்ளிட்ட 6 வந்தே பாரத் மற்றும் 2 அம்ரீத் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.