30 வருடமாக மௌனவிரதம் : ஶ்ரீராம ஜன்ம பூமிக்காக சரஸ்வதி தேவி கடந்த 30 வருடங்களாக மௌனவிரதம் இருந்து வருகிறார். அயோத்யாவில் ப்ராண ப்ரதிஷ்டை ஜனவரி 22 அன்று நடந்து முடிந்தவுடன் ராம் ஸியாராம் என்று சொல்லி தனது மௌன விரதத்தை முடிவுக்குக் கொண்டு வர உள்ளார். 85 வயதாகும் சரஸ்வதி தேவி ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கரம்டண்ட் என்ற ஊரைச் சேர்ந்தவர். அயோத்தியில் ஶ்ரீ ராம ஜன்ம பூமியில் ஆலயம் அமையும் வரை மௌனவிரதம் இருப்பேன் என்று 30 வருடங்கள் முன்பு சங்கல்ப்பம் எடுத்து அதை கடைபிடித்து வருகிறார். தற்போது அயோத்தியில் ஶ்ரீ ராமர் ஆலயம் அமைந்து ப்ராண ப்ரதிஷ்டை நடைபெற இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்து அயோத்தி சென்றுள்ள அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். ஷேத்ர ட்ரஸ்ட் தலைவர், அயோத்யா வாசி மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் அவர்களை 1992 மே மாதத்தில் சந்தித்து இருக்கிறார். அவர் சரஸ்வதி தேவியை சித்ரகூடம் சென்று அங்குள்ள கம்டாநாத் மலையை வலம் வருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். சித்ரகூடம் சென்ற சரஸ்வதி தேவி 14 கி.மீ. சுற்றளவு கொண்ட மலையை ஒரு கப் பால் மட்டும் அருந்தி பக்தியுடன் தினசரி வலம் வந்துள்ளார். 7 மாதங்களுக்குப் பிறகு அயோத்தி திரும்பிய சரஸ்வதி தேவி மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் அவர்களை சந்தித்த போது மெளன விரதம் இருக்குமாறு கூறியுள்ளார். அதை வேத வாக்காகக் கருதிய சரஸ்வதி தேவி அன்றிலிருந்து (1992) இன்றுவரை (2023) அயோத்தியில் ஶ்ரீ ராம ஜன்ம பூமியில் ஆலயம் அமைந்திட வேண்டி மெளன விரதம் இருந்து வருகிறார். ஜனவரி 8 ஆம் தேதி அயோத்தி சென்றுள்ள சரஸ்வதி தேவியை மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் அவர்களின் பிரதான சீடர்கள் இருவர் அயோத்யா தாம் ரயில் நிலையம் சென்று வரவேற்றுள்ளனர். தற்சமயம் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்தில் தங்கி உள்ளார். அடுத்த 4 மாதங்களுக்கு அங்குதான் தங்கி இருக்கப் போகிறார். ராஜஸ்தானில் பிறந்து வளர்ந்துள்ள சரஸ்வதி தேவி பள்ளிக்கே சென்றதில்லை. திருமணத்திற்குப் பிறகு கணவர் தேவகி நந்தன் அகர்வால் எழுதப் படிக்கக் கற்றுத்தந்துள்ளார்.சிறிது சிறிதாகப் படித்துப் பழகிய சரஸ்வதி தேவி துளசி தாசரின் ஶ்ரீ ராம சரித மானஸ் போன்ற ஆன்மீக நூல்களைப் படிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துள்ள சரஸ்வதி தேவி சுத்தமான சைவ உணவுப் பழக்கம் கொண்டவர். சாதாரண குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்துள்ள சரஸ்வதி தேவியின் சங்கல்பம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.இவரைப் போன்ற பல்லாயிரக் கணக்கான ராம பக்தர்களின் பக்திக்கு ஈடாக எதுவும் இல்லை. ஶ்ரீ ராம் ஸியாராம்!