இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, கர்த்வயா பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த அணிவகுப்பில், பரம்வீர் சக்ரா, அசோக சக்ரா விருது பெற்றவர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில், பீஷ்மா, சரத் ராணுவ தளவாட வாகனங்கள் எதிரிகளின் தளவாடங்களை கண்டறியும் ரேடார் அமைப்பு, ட்ரோன் தடுப்பு அமைப்புகள், நடமாடும் ஏவுகணை லாஞ்சர்கள், வான் தடுப்பு அமைப்பு , டி90 பீஷ்மா டாங்க் , பினாகா ராக்கெட்கள் ஆகியவையும் அணிவகுத்து சென்றன. தொடர்ந்து, சீக்கிய ரெஜிமெண்ட் படையினர், முப்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள், இந்திய ராணுவத்தின் பழமையான காலாட்படையான மெட்ராஸ் ரெஜிமெண்ட் படையினர், ராஜ்புதானா ரைபிள்ஸ் படையினர், ஆயுதப்படை மருத்துவ சேவையின் மகளிர் அணியினர், முதல்முறையாக டில்லி போலீசின் மகளிர் பிரிவினர், எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டக பிரிவினரும் மிடுக்காக அணிவகுத்து சென்றனர். இந்திய கடற்படையின் அலங்கார ஊர்தியானது பெண்கள் சக்தி மற்றும் தன்னிறைவு இந்தியாவை மையப்படுத்தி இருந்தது. மேலும் ஐஎன்எஸ் விக்ராந்த், கடற்படை கப்பல்கள், மற்றும் கல்வாரி நீர்மூழ்கி கப்பலையும் பிரதிபலிக்கும் வகையில் கடற்படை அணிவகுப்பு இடம்பெற்றது. விமானப்படை வீரர்கள், படை தலைவர் சுமிதா யாதவ் மற்றும் பிரதிதி அஹூவாலியா தலைமையில் அணிவகுத்து சென்றனர். விமானப்படையின் வலிமையை எடுத்துரைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட விமானப்படை அலங்கார ஊர்தி சென்றது. முதல்முறையாக, எல்லை பாதுகாப்பு படையின் பெண்கள் இசைக்குழுவினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையின், பெண்கள் படையினர், நாட்டின் பெண்கள் சக்தியை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுத்து சென்றனர்.