வீரப்பெண்மணி கோவிந்தம்மாள் (INA)

0
163

 

நமது இந்திய திருநாட்டின் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் (INA)பணியாற்றிய தியாகி ஆம்பூரை சேர்ந்த கோவிந்தம்மாள் அவர்கள்.பருவ வயதில், மலேசியாவில் ரப்பர் எஸ்டேட்டில் எழுத்தராக பணிபுரிந்த அருணாச்சலம் என்பவருடன் திருமணம் நடந்தது.

ஒரு சமயம், மலேசியாவில் மலாக்கா பிராந்தா என்ற இடத்தில் கூட்டமொன்றில் நேதாஜி உரையாற்றினார். அதனை கேட்டு, அந்த இடத்திலேயே ராணுவ நிதியாக தான் அணிந்திருந்த 6 பவுன் தங்க வளையலையும், தன்னுடைய ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தையும் ஐ.என்.ஏ. வுக்கு நன்கொடையாக கொடுத்தவர்.

1943-ல், இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கென “ஜான்சிராணி ரெஜிமெண்ட்” படை ஏற்படுத்தப்பட்ட போது, அதில் சிப்பாயாக சேர்ந்தார். 1000 பெண்கள் கொண்ட அந்த படையில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு ரக துப்பாக்கிகள் சுடும் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த 100 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவர் கோவிந்தம்மாள்.

இவர் இந்திய தேசிய ராணுவ முகாமில், இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, அங்கு மாறுவேடத்தில் வந்த நேதாஜி, ராணுவ முகாமுக்கு உள்ளே செல்ல முயன்றார். அவரை கோவிந்தம்மாள் தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்துள்ளார். பிறகு நேதாஜி மாறுவேடத்தை கலைத்து, தன்னுடைய முகத்தை காட்டிய பிறகு தான் அவரை உள்ளே அனுமதித்துள்ளார். இவ்வாறு கடமை தவறாது இருந்த இவரை, நேதாஜி பாராட்டியுள்ளார். தனது சொத்துக்களை எல்லாம் தேச விடுதலைக்காக கொடுத்து விட்டு, கடைசி வரையில் சொந்த வீடில்லாமலே வாழ்ந்து மறைந்த, வீரப்பெண்மணி கோவிந்தம்மாளின் பிறந்ததினம் இன்று (22.02.1927).

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here