ஞானவாபி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
119

உத்தர பிரதேச மாநிலம் ஞானவாபி வளாகத்தில் இந்துக்கள் பூஜை செய்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முஸ்லீம் அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி 17-ஆம் நூற்றாண்டில் இந்துக் கோவில்களை இடித்து விட்டு கட்டப்பட்டது.

ஆகவே, மசூதியில் ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்து சமூகத்தைச் சேர்ந்த சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து மசூதி நிர்வாகத் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

ஆனால், வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க 2 நீதிமன்றங்களும் மறுத்து விட்டன. இதை அடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஞானவாபி வளாகத்தில் அறிவியல் பூர்வமான விரிவான ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த 5 மாதங்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்துக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பின்னர், மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் பூஜைகள் செய்து வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதனிடையே, இங்கு இந்து மக்கள் பூஜை செய்ய அனுமதிக்கக்கூடாது என முஸ்லீம் அமைப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். முழு விசாரணைக்கு பின்னர் இன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், இந்து மக்கள் இந்த வளாகத்தில் பூஜை செய்து கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. மேலும், முஸ்லீம் அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here