இறந்த பிறகும்கூட கிறிஸ்தவ ஆங்கிலேயர்களின் மனதில் பயத்தை விதைத்த சந்திரேசகர ஆசாத் பலிதானம் இன்று

0
286

சர்ரென்று ஒரு கல் பறந்து ஒரு மண்டையைத் தாக்கியது. ரத்தம் கொட்டியது. தாக்கப்பட்டது ஒரு சப்-இன்ஸ்பெக்டர். தாக்கியது ஒரு சிறுவன். காசியில் சுதந்திரக் கனலை ஏற்படுத்தும் விதமாக ஒரு ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது. அதில் பல தலைவர்கள் கலந்துகொண்ட பெரும் கூட்டம் ஊர்வலமாகச் சென்றது. அதைத் தடுக்க முயன்ற ஆங்கில சப்-இன்ஸ்பெக்டர், ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சுவாமி சங்கரானந்தர் என்ற துறவியை தன் லட்டியால் அடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அந்த இடத்துக்கு காசி வித்யா பீடத்திலிருந்து புறப்பட்ட மாணவர்கள் ஊர்வலமும் வந்து சேர்ந்தது. அந்த ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சிறுவன் இந்தக் காட்சியைக் கண்டான். அகிம்சை முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்களே என எண்ணினான். உடனே கோபம் உச்சிக்கேறியது. ஒரு கல்லை எடுத்தான், குறி பார்த்தான், அடித்தான், சப் இன்பெஸ்க்டர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறுவன் சிரித்தவாறு கம்பீரமாக நின்றிருந்தான். சப்-இன்ஸ்பெக்டர், ‘அந்த பையனைப் பிடி, பிடி’ என்று கத்தினான். கான்ஸ்டபிள்கள் ஓடிவந்து அந்தச் சிறுவனைப் பிடிப்பதற்குள் அந்தச் சிறுவன் காட்டுப் பகுதிக்குள் ஓடித் தப்பிவிட்டான். அந்த சிறுவன் தான், சந்திரேசகர ஆசாத். இப்படி சிறுவயதிலேயே வீர சாகசம் செய்த சந்திரசேகர ஆசாத்தின் இயற் பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டபோது அவரது வயது 15. அப்போதே நீதிமன்றத்தில் சுவாரஸ்யமான பதிலை அளித்து நீதிபதியை கோபப்படச் செய்தார். அதன் பிறகே ‘சந்திரசேகர ஆசாத்’ என அனைவராலும் அறியப்பட்டார். ஆசாத், 1906 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 -ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், சபுவா மாவட்டம் ‘பாப்ரா’ என்ற ஊரில் பிறந்தார். அப்பா சீதாராம் திவாரி. அம்மா ஜக்ராணி தேவி. சிறுவனாக இருக்கும்போதே வில் வித்தை கற்றார். (இந்தப் பயிற்சிதான் சப்-இன்ஸ்பெக்டர் மண்டையை குறிதவறாமல் தாக்க உதவியது எனலாம்) இவரது அம்மாவிற்கு, சந்திரசேகரை சமஸ்கிருதம் படிக்கச் செய்ய வேண்டும் ஆசை. எனவே காசிக்கு அனுப்பினார். கொள்கையில் உறுதியாய் இருந்த சந்திரசேகர ஆசாத், முழு சுதந்திரத்தை எந்த வழியிலும் அடைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். ராம் பிரசாத் பிஸ்மில் என்பவரின் அறிமுகம் கிடைத்த்து. இவர் ‘இந்துஸ்தான் குடியரசு’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்திவந்தார். இந்த அமைப்பில் சந்திரசேகர ஆசாத் சேர விரும்பினார். அதில் சேர்வதற்காக விளக்குத்தீயில் தன் கையை சுட்டுக்கொண்டு தனது மன உறுதியை நிரூபித்தார். 1925 -ஆம் ஆண்டு காகோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார். அப்போது ஆங்கில அரசு புரட்சியாளர்களை ஒடுக்க தீவிரம் காட்டியது. சந்திரசேகர ஆசாத், பகத் சிங், சுக் தேவ், ராஜ்குரு போன்றவர்கள் இணைந்து இந்துஸ்தான் குடியரசு அமைப்பினை உருவாக்கினார்கள். 1931, பிப்ரவரி 27 அன்று அலகாபாத் ‘அல்ப்ரெட்’ பூங்காவில் இயக்க நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது போலீஸார் சுற்றி வளைத்துக்கொண்டனர். நண்பர்களைத் தப்பிக்க வைத்துவிட்டு தானும் தப்பிப்பதற்காக போலீஸாரிடம் போரிட்டார். அப்போது அவர் காலில் குண்டடிபட்டது. தப்பிச்செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டது. துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டு மட்டுமே இருந்தது. போலீஸாரிடம் உயிருடன் சிக்க அவர் விரும்பவில்லை. தன்னைத் தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் மாபெரும் புரட்சி வீரராகத் திகழ்ந்த சந்திரசேகர ஆசாத்தின் முழு வாழ்க்கை வரலாறு, நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வீர சரித்திரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here