வயலின் சக்கரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம் இன்று

0
218

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் மார்ச் 2, 1935 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ராமஸ்வாமி சாஸ்திரி கர்னாடக இசைக் கலைஞர். புல்லாங்குழல், கிதார், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பல இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் படைத்தவர். அவரிடம் பாட்டு கற்றார். சண்முகநாதபுரம் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர், தந்தை நடத்திய ‘சண்முக வித்யாசாலை’ என்ற சமஸ்கிருத பாடசாலையில் படித்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞர்கள். ஒருமுறை இவர்களது கச்சேரிக்கு வயலின் கலைஞர் வரவில்லை. காரணம் கேட்டதற்கு, ‘‘ஏன் உங்கள் வீட்டு கடைசிப் பையனை வயலின் வித்வான் ஆக்கிவிட வேண்டியதுதானே!’’ என்றார் நக்கலாக. அதையே சவாலாக எடுத்துக்கொண்ட தந்தை 8 வயதே ஆன மகனுக்கு வயலின் கற்றுத் தந்தார். சிரத்தையுடன் கற்றுக்கொண்டவர் 12-வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976 முதல், வயலின் இசையையே பிரதானமாகக் கொண்டு கச்சேரி செய்தார். திருவையாறு தியாகப்பிரம்ம மகோத்சவ சபை செயலராக 28 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இருந்தார். ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி, இசையால் நோய்களை குணப்படுத்துவது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். பிரபல தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து 3000-க்கும் மேற்பட்ட கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தினார். தோடி ராகம் வாசிப்பதில் நிகரற்றவர். தமிழ் பக்தி இசைக்குப் பெரும் தொண்டாற்றியவர். 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘திருமலை தென்குமரி’ படத்துக்கு இசையமைத்ததற்காக தமிழக அரசின் விருதைப் பெற்றார். இசைப் பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி, பத்ம உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். வயலின் இசையில் பல புதுமைகளை செய்தார். இவரது வயலின் பேசும், பாடும்! கர்னாடக இசை, மெல்லிசை, திரைப்பட இசையோடு பறவைகள், மிருகங்களின் ஒலிகள், இயற்கையின் சப்தங்களையும் வயலினில் பிரதிபலித்தார். கர்னாடக இசை பற்றி தெரியாதவர்கள்கூட அதை ரசிக்கும் வகையில் இனிமையாக, எளிமையாக வயலின் இசையை வழங்கியவர். ‘வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர்’ என்று போற்றப்பட்டார். 61 ஆண்டுகள் தன் இசையால் மக்களை மெய்மறக்கவைத்து, ‘வயலின் சக்கரவர்த்தி’ என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 73-வது வயதில் (2008) மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here