உத்தரகாண்ட் மாநில பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 7-ந்தேதி உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவை அமல்படுத்துவதன் மூலம், சுதந்திரத்திற்குப் பிறகு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் மாநிலம் பெறுகிறது.
ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், அனைத்து குடிமக்களும் சம உரிமைகளைப் பெறுவார்கள் என உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் ஒடுக்குமுறையும் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் சமூக சமத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதன் மூலம் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் UCC இன்றியமையாத பங்கு வகிக்கும் என்று தாமி தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம், பராமரிப்பு, தத்தெடுப்பு, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்களில் எந்தப் பாகுபாடுமின்றி மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.