ABVP போராட்டத்தைத் தொடர்ந்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடக கலை துறை தலைவர் நீக்கப்பட்டுள்ளார்.

0
188

புதுசேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கலாச்சார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் கலாச்சார விழா நடத்தப்பட்டது.

அதில் எழிலி 2k24-யில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் விதத்தில் இருந்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த நாடகத்தில் சீதை, ஹனுமன் போன்ற தெய்வங்கள் போல் வேடமிட்டு அவர்களை அவமதிக்கும் வகையில் நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது இந்த நாடகத்தில் சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சி வழங்குவதாகவும், ஹனுமானின் கதாபாத்திரத்தை சிதைத்தும் காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த நாடகத்தில் சீதை ராவணனுடன் நடனமாடுவது போலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது.

இதை தொடர்ந்து அக்கல்லூரியின் நாடகக் கலைத் துறைத் தலைவர் டாக்டர் ஷர்வணன் வேலு கலை துறை தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய குழுவை அமைத்து பல்கலைக்கழகம் விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் இதுதொடர்பான அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சோமயானம் என்ற நாடகத்தை நடத்திய மாணவர்கள் அதற்காக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், “இந்த நாடகம் எந்த ஒரு மத நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கத்தில் போடப்படவில்லை. அனைத்து சமூக மற்றும் கலாச்சார பின்னணியில் இருந்து வந்தவர்கள், அனைவரின் நம்பிக்கைகளையும் சமமாக மதிக்கிறோம். யாருடைய மத உணர்வுகளையும் நாங்கள் புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here