காஞ்சிபுரம் சங்கரமடம் வந்த ஜெயின் பின் துறவிகள் விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்தனர் அவர்கள் ஸ்வாமியிடம் இயற்கையை
பாதுகாத்தல் மரக்கன்றுகள் நடுதல், மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்தல், சைவ உணவின் நன்மைகளை எடுத்துக் கூறுதல், பசுக்களை பாதுகாத்தல், போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறுதல், இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக பேசினர். மேலும் இந்தியா முழுவதும் 705 ஜெயின் துறவிகள் இது குறித்து பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து துறவிகளிடம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியது: இன்றைய நிலையில் பக்தியோடும், இயற்கையோடும் இணைந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். பக்தியோடு கலந்த கல்வியை கற்றுத் தரும்போது குடும்ப மண முறிவுகள் ஏற்படாது. இளைஞர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு செல்ல மாட்டார்கள்.
தீவிரவாதம் மறைந்து சகோதரத்துவம் வளரும். முக்கியமாக இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக அமையும். சிறந்த தேசத்தையும் அவர்கள் உருவாக்குவார்கள். இதனால் பக்தியோடு இணைந்த கல்வி அவசியம் என்றார். இந்த நிகழ்ச்சியின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஜெயின் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.