கோவில் நிலத்துக்கு பதிலாக அரசு நிலத்தில் ஏன் கல்லூரி துவங்க கூடாது: ஹை-கோர்ட்

0
157

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கொளத்துாரில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி; நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார்; துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்திலும் கோவில்கள் சார்பில் கல்லுாரிகள் துவங்கப்பட்டன.

இதை எதிர்த்து ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ‘தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. கோவில்களை தக்கார் தான் நிர்வகிக்கின்றனர். கல்லுாரிகள் துவங்க கோவில் நிதியை பயன்படுத்தக் கூடாது’ என கூறப்பட்டது.

இவ்வழக்கு கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி ”மூன்று கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்.

”கொளத்துாரில் 46.75 கோடி ரூபாய் மதிப்பிலான 3.5 ஏக்கர் அரசு நிலம் அறநிலையத் துறைக்கு ஒதுக்கப்பட்டு 2022 ஜனவரியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. அங்குள்ள சோமநாதசாமி கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்துடன் இந்த 3.5 ஏக்கரையும் கல்லுாரிக்காக பயன்படுத்தி கொள்ளலாம்” என்றார்.

மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி ”ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்; இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

”மற்ற மதப் பிரிவினரும் அரசு நிலத்தை தங்களுக்கு ஒதுக்க கோருவர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை பயன்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.

”மேலும் 15 கி.மீ. தொலைவில் உள்ள கொளத்துாரில் கல்லுாரி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அங்கு கல்லுாரி துவங்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து அட்வகேட் ஜெனரலிடம் ‘இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பது தான் அரசின் நோக்கம் என்றால் கோவில்களுக்கு பதிலாக உயர் கல்வித் துறை வாயிலாக அரசு நிலத்தில் ஏன் கல்லுாரிகள் துவங்கக் கூடாது?

‘இதன் பின்னணியில் உள்ள கொள்கை என்ன? நீங்கள் ஏன் இத்தனை வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

விசாரணையை அக்.,28க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here