அயோத்தியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ராமர் கோவிலில், ராம நவமியையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆண்கள், பெண்கள் என பலரும் பேரணி போல் வரிசையாகச் சென்று பால ராமரை பயபக்தியோடு தரிசனம் செய்தனர். கோவிலில் பால ராமர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என பக்தி முழக்கம் எழுப்பினர். அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ராம நவமி விழா இது என்பதால் இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர். ராம நவமி விழாவை பக்தர்கள் காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட பிரமாண்ட எல்.இ.டி. திரைகள் அயோத்தி முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களுக்காக குடிநீர், பேருந்து வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உத்தரப்பிரதேச அரசு சிறப்பாக செய்துள்ளது.
இதனைதொடர்ந்து ராம நவமி விழாவின் ஒன்பதாவது நாளான இன்று முக்கிய நிகழ்வாக, கோவில் கருவறையில் உள்ள பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர்.