கடம்பினி கங்கூலி (அ) காதம்பனி கங்குலி 18 ஜூலை 1861 ஆம் ஆண்டு பிறந்தார்.
கங்கூலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1886 ல் ஜிபிஎம்சி பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். இவரும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்கள். 1883ல் கடம்பினி பிரம்ம சீர்திருத்தவாதியும், பெண்விடுதலைக்குப் போராடிய துவாரகநாத் கங்கூலியைத் திருமணம் செய்தார். அதற்கு பிறகு ஆசிரியர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி கடம்பனி மருத்துவம் படித்தார். கடம்பினியும், துவாரகநாத் கங்கூலியும் பெண்விடுதலைக்காகவும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களின் பணிவரைமுறைகளைச் சீர்திருத்தவும் பாடுபட்டனர். 1889-ல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆறு பிரதிநிதிகளில் கடம்பினி கங்கூலியும் ஒருவர். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு 1906 ல் கல்கத்தாவில் மகளிர் மாநாட்டை நடத்தினார். 1908-ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வாலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு அனுதாபமும், ஆதரவும் தெரிவிக்கும் வண்ணம் கல்கத்தாவில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி நடத்தினார். அந்தப் பணியாளர்களுக்கு உதவிசெய்ய சங்கங்கள் அமைத்து நிதி திரட்டினார்.