செங்கல்பட்டு அருகே கொளத்தூரில் (1876) பிறந்தார். கிராமத்தில் ஒரு ஆசிரியரிடம் தொடக்க இசைப் பயிற்சி பெற்றார். 14-வது வயதில் சகோதரர்களுடன் சேர்ந்து திருவையாறில் பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடம் குருகுல முறைப்படி இசை பயின்றார்.
மைசூர் நவராத்திரி விழாவில் பாட இவருக்கு அழைப்பு வந்தது. அப்போது இவர் பாடிய பல்லவியைக் கேட்ட மைசூர் மகாராஜா, இவரை அரண்மனை ஆஸ்தான பாடகராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஒரு சமயம், மிக நுட்பமான ஒரு பல்லவியை இவர் தன்னை மறந்து 4 மணி நேரம் பாடியதைக் கேட்டு வியந்த மகாராஜா இவருக்கு ‘டைகர்’ என்ற பட்டத்தை சூட்டினார்.
மைசூர் அரண்மனையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், சென்னை மியூசிக் அகாடமியின் ஆசிரியர்களுக்கான இசைக் கல்லூரி (டீச்சர்ஸ் காலேஜ் ஆஃப் மியூசிக்) முதல்வராக 5 ஆண்டுகள் பணியாற்றினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரி, சென்னை அடையாறு கலாஷேத்ராவில் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். எளிமையாக வாழ்ந்தவர். மாணவர்கள் உட்பட யாரிடமும் கோபித்துக்கொள்ள மாட்டார். நெற்றியில் நாமம், கையில் குடை, தென்னங்கீற்றால் செய்யப்பட்ட வெற்றிலைப் பெட்டி இல்லாமல் அவரைப்பார்க்கவே முடியாது.
. சென்னை மியூசிக் அகாடமி இவருக்கு 1932-ல் ‘சங்கீத கலாநிதி’ விருதை வழங்கியது. பல சீடர்களை உருவாக்கி கர்னாடக இசையை பிரபலமாக்கிய டைகர் வரதாச்சாரியார் 73-வது வயதில் மறைந்தார்.