உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கான் என்ற ஊரில் அகஸ்ட்3,1886 ஆம் ஆண்டு பிறந்தார். 12 வயதிலேயே கவிதை எழுதினார். நெகிழ்ந்துபோன அப்பா, ‘என்னைவிட ஆயிரம் மடங்கு சிறந்த கவிஞனாக மாறுவாய்’ என்று ஆசிர்வதித்தார். பல இதழ்களில் கவிதைகள் எழுதி பிரபலமானார். இந்தி இலக்கிய உலகின் சிறந்த படைப்பாளியான மஹாவீர் பிரசாத் திவேதியின் தொடர்பால் இவரது இந்தி மொழி ஞானம் விரிவடைந்தது. அவரைத் தன் குருவாக ஏற்றார். ‘ரங் மே பங்’ இவரது முதல் முக்கிய படைப்பு. அனைவருக்கும் எளிதாக புரியும் நடையைப் பின்பற்றினார். 1916-ல் ‘சாகேத்’ காவியம் படைத்தார். இது இவரது படைப்புகளிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. பல புத்தகங்களை வெளியிட்டார். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் எழுதினார். மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்தார். ‘பாரத் பாரதி’ என்ற காவியத்தில் இந்தியாவின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து சித்தரித்தார். இது ஆராய்ச்சி நூலாகக் கருதப்பட்டது. ராமாயணம், மகாபாரதம், புத்தமதக் கதைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இவரது காவியங்கள் படைக்கப்பட்டன. ஜெயத்ரத் வத், கிஸான், விகட் பட், வைதாலிக், குணால், விஸ்வராஜ்ய, ஜஹுஷ், காபா – கர்பலா ஆகியவை இந்தி இலக்கியத்தின் தன்னிகரற்ற படைப்புகளாக கருதப்படுகின்றன. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். மகாத்மா காந்தி இவருக்கு ‘ராஷ்டிர கவி’ என்று புகழாரம் சூட்டினார். இவரது ‘சாகேத்’ கவிதை நூலுக்கு ‘மங்கள் பிரசாத்’ விருதை இந்தி சாகித்ய சம்மேளனம் 1936-ல் வழங்கியது. பத்மபூஷண் விருதும் பெற்றவர். இந்தி இலக்கிய அன்னையின் ‘செல்லப்பிள்ளை’ என்று போற்றப்படும் மைதிலி சரண் குப்த் வாழ்நாள் கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்தார். 78 வயதில் (1964) மறைந்தார்.